எல்லைகளில் தீவிரக் கண்காணிப்பு ...தனியார் வாகனங்களுக்குத் தடை
தமிழகத்தில் பிற மாநில எல்லைப்புற மாவட்டங்களில் சோதனைச் சாவடிகளில் தனியார் வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன. அரசு பேருந்துகளில் வரும் பயணிகள் சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கேரள மாநில எல்லையில் உள்ள 32 சோதனைச் சாவடிகளிலும் காவல்துறையினரும் சுகாதாரத்துறையினரும் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். உணவுப்பொருட்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்கள், மருத்துவ ஊர்திகள் ஆகியவை மட்டுமே இரு மாநிலங்களிடையே எல்லை தாண்டிச் செல்ல அனுமதிக்கப்படுகின்றன. களியக்காவிளையில் கேரளத்தில் இருந்து தமிழகத்துக்கு வரும் தனியார் வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தித் திருப்பி அனுப்புகின்றனர்.அரசு பேருந்துகளைத் தடுத்து நிறுத்திப் பயணிகளுக்குக் கொரோனா அறிகுறி உள்ளதா என்பதை அலுவலர்கள் ஆய்வு செய்கின்றனர். அதன்பின் பேருந்துகளுக்குக் கிருமி நாசினி தெளித்த பின்னரே தமிழகத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றன.
தென்காசி மாவட்டத்தில் தமிழக கேரள எல்லையான புளியரையில் உணவு, மருந்து ஆகிய இன்றியமையாப் பொருட்களை ஏற்றி வரும் வாகனங்கள் மட்டும் கேரளத்துக்கு அனுமதிக்கப்படுகிறது. இரு மாநில அரசு பேருந்துகளைத் தவிரப் பிற வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன. தமிழக சுகாதாரத் துறை, கால்நடைத் துறை ஆகியவற்றின் சார்பில் தனித்தனி முகாம்கள் அமைத்துக் கேரளத்தில் இருந்து வரும் பேருந்துகளுக்குக் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. பேருந்தில் வரும் பயணிகளுக்கும் கொரோனா அறிகுறிகள் உள்ளனவா என அலுவலர்கள் பரிசோதித்து வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் கர்நாடக எல்லையில் அமைந்துள்ள பண்ணாரி சோதனைச் சாவடியில் தனியார் வாகனங்களும் பயணிகள் வாகனங்களும் அனுமதிக்கப்படவில்லை. இன்றியமையாப் பொருட்களான மருந்து, பால், பெட்ரோல், டீசல், காய்கறி ஆகியவை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. அவற்றுக்கும் சுகாதாரப் பணியாளர்கள் கிருமி நாசினி தெளித்து வருகின்றனர். இதனால் பண்ணாரி சோதனைச்சாவடியில் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலை வெறிச்சோடிக் காணப்படுகிறது
கொரோனா முன்னெச்சரிக்கையாக தமிழக-கர்நாடக எல்லைகள் மூடப்பட்டதால் பண்ணாரி சோதனைச்சாவடி வெறிச்சோடி காணப்படுகிறது.சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில், தமிழக-கர்நாடக எல்லையில் அமைந்துள்ள பண்ணாரி சோதனை சாவடியில் வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை.இதனால் போக்குவரத்து இன்றி காணப்படுகிறது. அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்கு வரும் வாகனங்கள் ஓசூர் அருகே இரு மாநில எல்லையான அத்திப்பள்ளி சோதனைச்சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டுத் திருப்பி அனுப்பப்படுகின்றன. ஓசூர் கோட்டாட்சியர், வட்டாட்சியர், வட்டாரப் போக்குவரத்து அதிகாரி, காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆகியோர் அப்பகுதியில் முகாமிட்டுக் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இன்றியமையாப் பொருட்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மட்டும் எல்லை தாண்டிச் செல்ல அனுமதிக்கப்படுகின்றன. இதேபோல் இரு மாநில எல்லைகளான கக்கனூர், சம்பங்கிரி, அந்திவாடி, பூனப்பள்ளி சோதனைசாவடிகளிலும் கர்நாடகத்தில் இருந்து வரும் வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன. குறைந்த எண்ணிக்கையிலான நகர பேருந்துகள் மட்டும் மக்களின் போக்குவரத்துக்காக அனுமதிக்கப்படுகின்றன.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்கே பேட்டை ஆகிய ஊர்களில் ஆந்திர எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. காய்கறி, பால், மருந்து, எரிபொருள் ஆகிய இன்றியமையாப் பொருட்களை ஏற்றி வரும் வாகனங்கள் மட்டுமே எல்லை தாண்டிச் செல்ல அனுமதிக்கப்படுகிறது. மற்ற வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் எல்லையோரப் பகுதிகளில் வாழும் மக்கள் வணிகம், வேலை ஆகியவற்றுக்காக எல்லை தாண்டிச் செல்ல முடியாமல் இன்னலுக்கு உள்ளாகியுள்ளனர்.
தமிழக ஆந்திர எல்லைகளான பொன்னை, காட்பாடி, பேரணாம்பட்டு, குடியாத்தம், வாணியம்பாடி, நாற்றம்பள்ளி ஆகியவற்றில் உள்ள சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. காட்பாடி கிறிஸ்டியான்பேட்டையில் உள்ள சோதனைச் சாவடியில் அரசு பேருந்துகளில் வரும் ஓட்டுநர் நடத்துநர், பொதுமக்களுக்குக் காய்ச்சல் கண்டறியும் சோதனை செய்யப்படுகிறது. சோதனைச்சாவடியில் தண்ணீர்த் தொட்டி வைக்கப்பட்டுக் கைகளை நன்றாகக் கழுவிய பின்னரே மாநிலத்துக்குள் வர அனுமதிக்கப்படுகிறது. ஆந்திர மாநிலத்தில் இருந்து காய்கறி, உணவுப் பொருட்கள் ஏற்றி வரும் வாகனங்கள் தடையின்றி அனுமதிக்கப்படுகின்றன. ஆந்திரப் பதிவெண் கொண்ட தேவையற்ற வாகனங்களை ஆந்திரச் சோதனைச்சாவடியிலேயே தடுத்து நிறுத்த அந்த மாநிலக் காவல் துறைக்கு வேலூர் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
Comments