கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி - பெட்ரோல், டீசல் மீதான வரியை தலா ரூ.2 உயர்த்த மத்திய அரசு திட்டம்?
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்திருப்பதால், பெட்ரோல், டீசல் மீதான வரியை மேலும் தலா 2 ரூபாய் அளவுக்கு மத்திய அரசு உயர்த்த திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை கச்சா எண்ணெயின் சராசரி கொள்முதல் விலை மார்ச் 16ஆம் தேதிக்குப் பிறகு, பேரலுக்கு 309 ரூபாய் அளவுக்கு குறைந்து 1,963 ரூபாயாக உள்ளது. அதேசமயம், சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக, கடந்த 14ஆம் தேதி, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி தலா 3 ரூபாய் உயர்த்தப்பட்டது.
கலால் வரியில் ஒரு ரூபாய் உயர்த்தினால், அரசுக்கு ஆண்டுக்கு 14 ஆயிரத்து 500 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும். இந்நிலையில், பெட்ரோல், டீசல் மீதான வரியை தலா 2 ரூபாய் அளவுக்கு மத்திய அரசு உயர்த்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் கிடைக்கும் கூடுதல் வருவாயை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கும் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் திட்டங்களுக்கும் பயன்படுத்த இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments