கொரோனாவை ஒழிக்க நாளை மக்கள் ஊரடங்கு..!

0 2675

நாளை பிரதமர் மோடி அறிவித்துள்ள மக்கள் ஊரடங்கு முழுமையாகக் கடைபிடிக்க அனைத்து ஏற்பாடுகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. காய்கறி போன்ற அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாளை முழு ஊரடங்கு அறிவித்துள்ள பிரதமர் மோடி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். அவசிய தேவை இருந்தால் ஒழிய மக்கள் வீடுகளை விட்டு வர வேண்டாம் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழ்நாட்டில் நாளை இரவு 9 மணி வரை மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த பேருந்துகள் ஓடாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தனியார் பேருந்துகளை இயக்கக் கூடாது என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அனைத்து தனியார் மற்றும் அரசு நூலகங்களும் வரும் 31ம் தேதி வரை மூடப்படுகின்றன.

தமிழகத்திற்கு பிற மாநிலங்களில் இருந்து வாகனங்கள் வர தமிழக அரசு தடை விதித்துள்ளது. கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய அண்டை மாநிலங்களின் எல்லைகள் மூடப்பட்டுள்ளன.

கோயம்பேடு காய்கறி சந்தை மூடப்படுவதாக அறிவித்துள்ள நிலையில், தேவைக்கு வாங்கி வைத்துக் கொள்ள இன்று கூடுதலாக காய்கறி, பால், பெட்ரோல் மருந்துகள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தனியார் பால் விநியோகம் காலை 7 மணி முதல் நிறுத்தப்படும் என்று பால் விற்பனையாளர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

அதிகாலை 3 மணி முதல் 7 மணி வரை பால் விநியோகம் செய்யப்பட உள்ளது. தமிழகம் முழுவதும் நாளை ஓட்டல்கள் மூடப்படுகின்றன. நாளை அனைத்துக் கடைகளும் அடைக்கப்படும் என்று வணிகர் சங்கங்கள் அறிவித்துள்ளன. மீனவர்களும் சுய ஊரடங்கை ஆதரித்து கடலுக்குச் செல்லப்போவதில்லை என்று தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY