இத்தாலியில் ஒரே நாளில் 627 பேர் உயிரிழப்பு
இத்தாலியில் நேற்று ஒரே நாளில் 627 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்தனர். ஸ்பெயின் மற்றும் ஈரானிலும் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இத்தாலியில் தொடர்ந்து 5 நாட்களாக கொரோனாவின் பாதிப்பால் தினசரி நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். கடந்த 4 நாட்களாக சராசரியாக 300 முதல் 400 பேர் உயிரிழந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 627 பேர் கொரோனா தாக்குதலில் பலியாகி இருப்பது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. ஏற்கனவே அங்கு 47 ஆயிரம் பேர் பாதிப்புக்கு உள்ளான நிலையில் நேற்று மட்டும் புதிதாக 6 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை அங்கு மட்டும் 4 ஆயிரத்து 32 பேர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 248 ஆக உள்ளது. தற்போது இந்த எண்ணிக்கையை இத்தாலி கடந்துள்ளது. அங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவப் பணியாளர்களில் 3,500க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் 17 மருத்துவர்கள் பலியாகி உள்ளனர். வைரஸ் பரவுவதை தடுக்க அந்நாட்டு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள போதும், வைரஸ் பாதிப்பால், பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இத்தாலி மக்கள் பீதியடைந்துள்ளனர். மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவே அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது.
இத்தாலியைத் தொடர்ந்து ஸ்பெயினிலும் ஒரே நாளில் 262 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து அங்கு முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. ஏற்கனவே அங்கு ஆயிரத்து 100 பேர் உயிரிழந்துள்ள நிலையில் புதிதாக 6 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதேபோல் ஈரானிலும் நேற்று ஒரே நாளில் 150 பேர் மரணித்துள்ளனர். இதையடுத்து அங்கு பலி எண்ணிக்கை ஆயிரத்து 500 ஐ நெருங்கியுள்ளது. பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளிலும் முறையே 78.....24 என கொரோனாவின் கொடூரக்கரங்களில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்தே வருகிறது. இதனால் கொடிய வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கும் பணி ஒரு பக்கம் நீடித்தாலும், அதனை பரவாமல் தடுக்கும் பணியும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் தீவிரமடைந்துள்ளன.
Comments