ருசிக்கு தேவை, கை சுத்தம்..! காற்றில் பறக்கும் சுகாதாரத்துறை உத்தரவு

0 9307

சென்னை மாநகரில் உணவகங்கள் வழக்கம் போல் இயங்கினாலும், வாடிக்கையாளர் வருகை குறைந்ததால், வெறிச்சோடி காணப்படுகின்றன. மற்றொருபக்கம், சுகாதாரத்துறையின் உத்தரவுகளை, ஹோட்டல் மற்றும் தேநீர் கடை உரிமையாளர்கள் காற்றில் பறக்க விட்டுள்ளதாகவும், புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து, அலசுகிறது, சிறப்பு செய்தி

பொதுமக்கள் அதிகம் கூடும் ஷாப்பிங் மால்கள் - பெரிய ஜவுளி கடைகள் - பிரமாண்ட நகைக்கடைகள் எல்லாம் மூடி விட்ட போதிலும், மனிதனின் அத்தியாவசிய தேவைகளில் முதலிடம் வகிக்கும் உணவு கொடுக்கும் ஹோட்டல்கள் வழக்கம் போல் இயங்குகின்றன. இருந்த போதிலும் வாடிக்கையாளர் வருகை குறைந்து, ஹோட்டல்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

சுகாதாரத்துறையின் உத்தரவுகளை சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் இயங்கும் ஹோட்டல்களும் தேநீர் கடைகளும் காற்றில் பறக்க விட்டுள்ளன.

சுகாதாரத்துறை அதிகாரிகள் வருவதை முன்கூட்டியே தெரிந்து கொண்டு, சிலமணிநேரம் மட்டும் கேமராவுக்கு முன் சுகாதாரம் பேணுவது போல் ஹோட்டல் நிர்வாகத்தினர் வேடிக்கை காட்டினர்.

ஹோட்டலில் உள்ளே நுழையும் முன் தங்களது கைகளை சோப்பு மூலம் நன்கு சுத்தம் செய்த பின்னரே வாடிக்கையாளர்களை அனுமதிக்க வேண்டும்.

பணியில் இருக்கக்கூடிய ஊழியர்கள் அனைவருமே தங்கள் கைகளை அவ்வப்போது சுத்தம் செய்வதோடு, அங்கு பயன்படுத்தப்படும் பிளேட்டுகள், கப்புகள் உள்ளிட்டவைகளை, வென்னீரில் சுத்தம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். ஆனால், இந்த உத்தரவுகள் எதுவும் அமல்படுத்தப்படுவது இல்லை என வாடிக்கையாளர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

இதேபோல,சென்னை மாநகரில் இயங்கும் தேநீர் கடைகளும் வழக்கம் போல அசுத்தமாக காட்டி அளிக்கின்றன. எனவே, எங்கும் சுத்தம் - எதிலும் சுத்தம் என்பதை ஹோட்டல்கள் முதல் தேநீர் கடைகள் வரை, கடைபிடிக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

தமிழக அரசும், சுகாதாரத்துறையும் நினைத்தால் மட்டும் கொரோனா போன்ற கொடிய வைரசை விரட்டிட முடியாது - சுகாதாரத்துறை அறிவுத்தலை கேட்டு ஹோட்டல் நிர்வாகத்தினரும், பொதுமக்களும் ஒத்துழைப்பு அளித்து நடந்தால் மட்டுமே பாதிப்பில் இருந்து மீளமுடியும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments