கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்றப்படுகிறதா என ஆய்வு

0 861

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆம்னி மற்றும் அரசுப் பேருந்துகளை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. 

சேலத்தில் தனியார் ஆம்னி பேருந்து நிலைய பணிமனையில் நின்றுக்கொண்டிருந்த அனைத்து பேருந்துகளில் உள்ள ஜன்னல் திரைச்சீலைகள் அகற்றப்பட்டதுடன், கிருமி நாசினியை கொண்டு ஜன்னல் கம்பிகள், கண்ணாடிகள், கைப்பிடிகள் சுத்தம் செய்யப்பட்டது.

இதைப்போன்று மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகேயுள்ள ஆம்னி பேருந்து நிலையத்தில் நின்றுக்கொண்டிருந்த அனைத்து பேருந்துகளையும் மதுரை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பாக நியமிக்கப்பட்ட பணியாளர் ஒருவர் கிருமிநாசினி திரவத்தை தெளித்து சுத்தம் செய்தார்.

கரூர் நகராட்சி சார்பாக பேருந்து நிலையத்திற்கு வரும் அனைத்து பேருந்துகளின் சக்கரங்கள், கைபிடிகள், இருக்கைகள், உடைமைகள் வைக்கும் இடங்களில் கிருமி நாசினி திரவம் தெளிக்கப்பட்டது. இப்பணியில் ஒரு ஷிப்டிற்கு 10 பேர் என நாள் ஒன்றுக்கு 2 ஷிப்ட் வீதம் 20 தூய்மை பணியாளர்கள், அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனியார் பேருந்துகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, சுகாதாரமான முறையில் உள்ளதா என போக்குவரத்து  அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.

நோய் தொற்று பரவாமல் இருக்கும்பொருட்டு அரசு பேருந்துகளில் பயன்படுத்தப்படும் போர்வைகள், திரைச்சீலைகள் நீக்கப்பட்டு தினசரி கிருமிநாசினிகள் தெளித்து சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.

ஆனால் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் ஒரு சில தனியார் பேருந்துகள் அரசின் அறிவுறுத்தல்களை முறையாக கடைபிடிக்கப்படுவதில்லை என புகார் எழுந்துள்ளது. இதன்பொருட்டு, 10க்கும் மேற்பட்ட போக்குவரத்து அதிகாரிகள் கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் ஆய்வு நடத்தினர்.

அப்போது, பயணிகள் பேருந்தில் ஏறும் போது சானிடைசர் வழங்க வேண்டும் என நடத்துனர், ஓட்டுநர்களுக்கு அறிவுரை வழங்கினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments