ம.பி. முதலமைச்சர் கமல்நாத் ராஜினாமா?

0 2922

மத்தியப் பிரதேச முதலமைச்சர் கமல்நாத் நண்பகல் 12மணிக்குச் செய்தியாளர்களைச் சந்திக்க உள்ள நிலையில், பதவி விலகலை அறிவிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 22 பேர் பேரவைத் தலைவரிடம் பதவி விலகல் கடிதம் அளித்தனர்.

இவர்களில் அமைச்சர்களாக இருந்த 6 பேரின் பதவி விலகல் மட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. சிந்தியாவின் ஆதரவாளர்கள் பெங்களூர் விடுதியில் தங்கியுள்ளனர். நம்பிக்கை வாக்கெடுப்புக்கு ஆளுநர் உத்தரவிட்டும் அதை ஏற்க மறுத்த பேரவைத் தலைவர் அவையை ஒத்தி வைத்தார்.

இந்நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப் பேரவைத் தலைவருக்கு உத்தரவிடக் கோரி பாஜக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு, கைகளை உயர்த்தும் முறையில் வெள்ளி பிற்பகல் 2 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி 5 மணிக்குள் முடிக்க உத்தரவிட்டது. மத்தியப் பிரதேசச் சட்டப்பேரவையில் இப்போதுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை 222 ஆகும்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற 112 உறுப்பினர்களின் ஆதரவு வேண்டும். காங்கிரசுக்கு ஏற்கெனவே இருந்த 114 உறுப்பினர்களில் 22 பேர் பதவி விலகல் கடிதம் அளித்துள்ளதால் காங்கிரசின் பலம் 92ஆகக் குறைந்துவிட்டது. பகுஜன் சமாஜ் உறுப்பினர்கள் இருவர், சமாஜ்வாதி உறுப்பினர் ஒருவர், சுயேச்சைகள் 4 பேர் என மொத்தம் 7 பேர் காங்கிரசுக்கு ஆதரவளிக்கின்றனர்.

இவர்களைச் சேர்த்தாலும் காங்கிரசின் பலம் 99 ஆகத்தான் இருக்கும். அதே நேரத்தில் பாஜகவின் பலம் 107ஆக உள்ளது.
இதனிடையே முதலமைச்சர் கமல்நாத்தின் வீட்டில் 11மணிக்கு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

அதையடுத்து நண்பகல் 12மணிக்கு முதலமைச்சர் செய்தியாளர்களைச் சந்திக்க உள்ளார். அப்போது அவர் தனது பதவி விலகலை அறிவிக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments