இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 195 ஆக உயர்வு

0 5225

டெல்லி, ஆந்திரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் மேலும் 22 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியானதைத் தொடர்ந்து, நாட்டில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 195ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் டெல்லி, கர்நாடகம், மகாராஷ்டிரா, பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த தலா ஒருவர் வீதம், மொத்தம் 4 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி உயிரிழந்துள்ளனர். இதுதவிர்த்து நேற்று வரை 173 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது உறுதியாகியிருந்தது.

இந்நிலையில், டெல்லி, ஆந்திரா, குஜராத், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் மேலும் 22 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது இன்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து நாட்டில் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 195ஆக அதிகரித்துள்ளது.

இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 47 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கடுத்து கேரளாவில் 28 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 19 பேரும், டெல்லி, ஹரியானா மாநிலங்களில் தலா 17 பேரும், கர்நாடகாவில் 15 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. 

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியிருக்கும் 195 பேரில், இந்தியர்கள் 163 பேர் என்றும், வெளிநாட்டினர் 32 பேர் என்றும் மத்திய சுகாதார அமைச்சக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இதேபோல் 20 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி விட்டதாகவும் அந்த புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

அதாவது உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த 9 பேரும், டெல்லி, ராஜஸ்தான் மற்றும் கேரளாவில் தலா 3 பேரும், தமிழ்நாடு மற்றும் தெலுங்கானாவில் தலா ஒருவரும் கொரோனாவில் இருந்து குணமாகியிருப்பதாக மத்திய சுகாதார அமைச்சக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments