விழிப்புடன் இருப்போம் : கொரோனாவை வெல்வோம் நோயற்ற தமிழகம் மலர அழைப்பு..!

0 3505

தமிழகம் முழுவதும் ஏசி வசதி கொண்ட பெரிய ஜவுளி கடைகள், பெரிய நகைக்கடைகள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் பெரிய கடைகள் அனைத்தையும் இன்று முதல் மூட, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் தொடர் பாதுகாப்பு நடவடிக்கை உள்ளிட்ட அம்சங்கள் குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சென்னை - தலைமை செயலகத்தில் ஆலோசனை நடைபெற்றது. பல மணி நேரம் நீடித்த இந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி முதலமைச்சர் பிறப்பித்த பல்வேறு உத்தரவுகள் குறித்து, செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவ வசதிகளுடன் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கான சிறப்பு மருத்துவமனை உடனடியாக ஏற்படுத்தப்படும். வார சந்தைகள், வருகிற 31 ம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏசி வசதி கொண்ட பெரிய ஜவுளி கடைகள், பெரியநகைக்கடைகள், பல்வகை பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் உள்பட மக்கள் அதிகம் கூடும் பெரிய கடைகள் அனைத்தையும் வெள்ளிக்கிழமை முதல் மூட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

அத்தியாவசியப் பொருள் விற்பனை செய்யும் மளிகைக் கடைகள், காய்- கனிக் கடைகள், மருந்தகங்கள் மற்றும் உணவகங்கள் வழக்கம் போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டில் இருந்து ஊழியர்களை பணியாற்ற நடவடிக்கை எடுக்குமாறு, தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள், சிறு - குறுந் தொழில் நிறுவனங்களுக்கு முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்பட பெரிய கோவில்களில் வருகிற 31 ம் தேதி வரை
பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், ஆகம பூஜைகளுக்கு எந்த தடையும் இல்லை. அனைத்து கால பூஜைகளும் வழக்கம் போல் நடைபெறும். தேவாலயங்கள், மசூதிகளுக்கு வருபவர்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் ரெயில்,பேருந்துகளின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை என்பன உள்ளிட்ட பல்வேறு முடிவுகள், முதலமைச்சர் தலைமையிலான கூட்டத்தில் எடுக்கப்பட்டன.

கொரோனா தடுப்பு பணியில்,தமிழக அரசுக்கு ஒத்துழைப்பு அளித்து, கொரோனா வைரஸ் நோயினை வென்று, நோயற்ற தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments