திருப்பதி கோயில் மூடல்..!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மகாராஷ்டிரா பக்தருக்கு கொரோனா அறிகுறி காணப்பட்டதையடுத்து மலைபாதை மூடப்பட்டு பக்தர்கள் வருகை நிறுத்தப்பட்டுள்ளது.
அந்த பக்தர் காய்ச்சல், இருமலுடன் திருப்பதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரத்த மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதையடுத்து முன்னெச்சரிக்கையாக அலிபிரியில் இருந்து திருமலை செல்லும் இரு மலைப்பாதைகளும், ஸ்ரீவாரி மெட்டு நடைபாதையும் மூடப்பட்டு பக்தர்கள் வருகை நிறுத்தப்பட்டது.
மேலும் கோவிலில் உள்ள 17 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் முடிந்ததும், வெளியேற்றப்பட்டு தரிசனம் நிறுத்தப்படும் என்றும் ஆனால் வழக்கமான பூஜைகளை அர்ச்சகர்கள் மேற்கொள்வார்கள் என்றும் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேபோன்று கீழ்திருப்பதி கோவிந்தராஜ பெருமாள், திருச்சானூர் பத்மாவதி தாயார், கோதண்டராமர் கோயில்களிலும் தரிசனம் நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன் கடந்த 1892 ஆம் ஆண்டு 2 நாட்கள் மட்டும் ஏழுமலையான் கோயில் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது
Comments