இந்தியாவில், கொரோனா சமுதாய நோய்த்தொற்றாக மாறவில்லை - இந்திய மருத்துவ ஆய்வுக் கவுன்சில்
இந்தியாவைப் பொறுத்தவரையில், கொரோனா சமுதாய நோய்த்தொற்றாக மாறவில்லை என இந்திய மருத்துவ ஆய்வுக் கவுன்சில் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று ஒரு நபருக்கு உறுதிப்படுத்தப்படும்போது, அவருக்கு எப்படி பரவியது எனக் கண்டறிய முடியவில்லை எனில், சமுதாய நோய்த் தொற்று என வரையறுக்கப்படும். கொரோனா தொற்று இருக்கிறது எனத் தெரியாமலேயே, அதாவது அறிகுறிகள் வெளியே தெரியாமலே உள்ள நபர்கள், தங்களை அறியாமல் பிறருக்கு நோய்த்தொற்றை பரப்பிக் கொண்டிருப்பதே சமுதாய நோய்த்தொற்றுக்கு காரணமாகும்.
இப்படிப்பட்ட நிலையில், கொரோனா பரவலை முறியடிப்பது மிகவும் கடினமானதாக மாறிவிடும். இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அது சமுதாயத் தொற்றாக மாறிவிடலாம் என அச்சம் எழுந்துள்ளது. இந்நிலையில், இதைக் கண்டறிவதற்காக இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் ஆங்காங்கே மாதிரிகளை எடுத்து பரிசோதித்தது.
தீவிர சுவாச நோய்த் தொற்று, கடுமையான நிமோனியா பாதிப்பு உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவு நோயாளிகள், கொரோனா பாதிப்பு உள்ள பகுதிகளுக்கு சென்றிடாதவர்களிடம் இருந்து சுமார் ஆயிரம் மாதிரிகள் கடந்த 15ஆம் தேதி முதல் எடுக்கப்பட்டு ஆய்வு செய்ததில், அதில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என உறுதிசெய்யப்பட்டது.
கொரோனா சமுதாய நோய்த்தொற்றாக மாறிவிடவில்லை என்பதை, இந்த முடிவுகள் காட்டுவதாக, இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் தலைமை இயக்குநர் பல்ராம் பார்க்கவா தெரிவித்துள்ளார். கோவிட்-19 போன்ற நோய் பரவல்கள் 4 கட்டங்களை கொண்டவை. முதல் கட்டத்தில் வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு மட்டுமே நோய்த்தொற்று இருக்கும், உள்ளூரில் இருந்து பரவாது.
இரண்டாவது கட்டத்தில், ஏற்கெனவே நோய்த்தொற்று உள்ளவர்களிடமிருந்து, தொடர்பில் உள்ள பிறருக்கு பரவத்தொடங்கும். அதாவது இந்த கட்டத்தில் உள்ளூரில் இருந்தே நோய் பரவத் தொடங்கும். மூன்றாவது கட்டம் என்பதுதான் சமுதாய நோய்த்தொற்று கட்டமாகும்.
பரவலாக பல பகுதிகளில் நோய்த்தொற்று பரவிவிடுவது நான்காவது கட்டமாகும். இந்தியாவைப் பொறுத்தவரை, கொரோனா தொற்று இரண்டாவது கட்டத்திலேயே உள்ளது என்றும், இன்னும் சமுதாய தொற்று என்ற நிலைக்கு மாறவில்லை என இந்திய மருத்துவ ஆய்வுக் கவுன்சில் தெரிவித்துள்ளது.
அதேசமயம், குறைந்த அளவு மாதிரிகளை எடுத்து, சிறிய அளவிலேயே இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் ஆய்வு மேற்கொண்டது என்றும், கோவிட்-19 இரண்டு, மூன்று வாரங்களுக்கு முன்னரே சமுதாய நோய்த்தொற்றாக மாறிவிட்டது என்றும் சில வல்லுநர்கள் மாறுபட்ட கருத்து தெரிவிக்கின்றனர்.
Comments