ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதா கொரோனா? விஞ்ஞானிகள் தகவல்
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் முதலில் சீனாவில் தான் உருவாகியிருக்கும் என்று நம்பப்படுகிறது. எனினும் சீனா இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்நிலையில் COVID-19 என்றழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்றானது இயற்கையான தோற்றத்தை கொண்டுள்ளதாக ஆய்வு முடிவு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
கிருமி போர் முறை என்றழைக்கப்படும் Bio war ஆயுத பயன்பாட்டிற்காக சீன ராணுவ ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டு வந்த வைரஸ் கிருமியே, அந்நாடு எதிர்பார்க்காத வகையில் திடீரென வெளியே பரவிவிட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. ஆனால் இந்த புகார்களை நீர்த்து போக செய்யும் வகையில், தற்போது புதிய ஆய்வு முடிவு ஒன்று வெளியாகியுள்ளது.
அதில் கொரோனா வைரஸ் தொற்றின் அமைப்பு இயற்கையாகவே உள்ளதாகவும், செயற்கையாக உருவாக்கப்பட்டது போல அதன் அமைப்பு இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவில் உள்ள ஸ்கிரிப்ஸ் ஆராய்ச்சி நிறுவனம் (Scripps Research Institute) ஆய்வு நடத்தியுள்ளது.
அந்த ஆராய்ச்சி நிறுவனத்தின் நோயெதிர்ப்பு மற்றும் நுண்ணுயிரியல் துறையின் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், உலகை தற்போது மிரட்டி வரும் COVID-19 வைரஸ், ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதாகவோ அல்லது வேண்டுமென்றே கையாளபட்டதாகவோ இருக்க வாய்ப்பில்லை என்பதை கண்டறிந்துள்ளனர்.
சீன விஞ்ஞானிகளால் முன்னர் வெளியிடப்பட்ட வைரஸின் பொதுவில் கிடைக்கக்கூடிய மரபணு வரிசை தரவுகளின் அடிப்படையில் இந்த ஆராய்ச்சி முடிவு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆய்வின் போது விஞ்ஞானிகள் ஸ்பைக் புரதம் எனப்படும் வைரஸின் வெளிப்புறத்தில் உள்ள கூர்மையான புள்ளியை பகுப்பாய்வு செய்தனர்.
ஸ்பைக் புரதம் மனிதன் மற்றும் விலங்கு உயிரணுக்களின் வெளிப்புற சுவர்களில் ஊடுருவ பயன்படுகிறது. கிடைக்கப்பெற்ற கொரோனா வைரஸ் விகாரங்களுக்கான கிடைக்கக்கூடிய மரபணு வரிசை தரவை ஒப்பிடுவதன் மூலம், SARS-CoV-2 இயற்கையான செயல்முறைகள் மூலமே தோன்றியது என்பதை உறுதியாக தீர்மானிக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
ஆய்வில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் கொரோனா பரவலுக்கு இரண்டு காரணங்களை முன்வைக்கின்றனர். அதில் முதலாவது என்னெவென்றால் வைரஸ் இயல்பான தேர்வின் மூலம் ஒரு விலங்கின் உடலுக்கு சென்று, மனிதர்களின் நோயெதிர்ப்பு மண்டலத்தை உடைக்கும் வகையில் நன்கு பரிணாம வளர்ச்சியடைந்து, பின்னர் அந்த விலங்கிலிருந்து மனிதர்களுக்கு பரவி இருக்கலாம்.
இரண்டாவதாக நோய் பாதிப்புகளை ஏற்படுத்தாத உயிரினம் ஒன்றிலிருந்து மனிதர்களுக்கு வைரஸ் பரவி, பின்னர் படிப்படியாக பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் நோய் கிருமிகளை கொண்ட வைரஸ்களாக மனிதர்களிடையே பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
மேற்கண்ட ஆய்வு முடிவுகள் பற்றி கூறியுள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தை சேர்ந்த பேராசிரியர் சஷாங்க் திரிபாதி, இந்த ஆய்வுக்கு முன்பே கொரோனா வைரஸ் வேண்டுமென்றே உருவாக்கப்பட்ட நோய் கிருமி அல்ல என்பதை அறிவியல் சமூகத்தில் பரவலாக கணிக்கப்பட்டது. ஏனென்றால் SARS மற்றும் MERS போன்ற நோய் தொற்றில் கொரோனா வைரஸ்களின் மரபணு வரிசை மற்றும் மூலக்கூறு அமைப்பு மிகவும் வித்தியாசமானது.
அந்த வகையில் SARS-CoV-2-ன் கொரோனா வைரஸ் கட்டமைப்பானது அவற்றிலிருந்து வித்தியாசமாக உள்ளது. மேலும் கொரோனா மேற்கண்டவற்றிலிருந்து வடிவமைக்கவோ அல்லது பிரதி எடுக்கவோ இல்லை என கூறியுள்ளார் சஷாங்க் திரிபாதி.
Comments