கொரோனா வைரஸ் எத்தனை மணிநேரம் உயிர்வாழும்..? புதிய ஆய்வு முடிவுகள்
காற்றின் நீர்த்திவலைகளிலும், தரை, மேசை, பாத்திரங்கள் போன்றவற்றின் பரப்புகளிலும் கொரோனா வைரஸ் எத்தனை மணிநேரம் உயிர்வாழும் என்பது தொடர்பாக புதிய ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
குறுகிய இடைவெளிகளில், இருமல், தும்மலின்போது தெறிக்கும் நீர்திவலைகள் மூலம் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு கொரோனா வைரஸ் பரவுகிறது. இந்நிலையில், பல்வேறு பரப்புகளில், கொரோனா வைரஸின் உயிர்வாழும் திறன் குறைவு என அமெரிக்காவின் நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
பொருட்களை பேக் செய்து அனுப்பும்போது, அதன் பரப்புகளில் கொரோனா வைரஸ் தொற்றியிருந்தாலும், சரக்குபோக்குவரத்துக்கு நாட் கணக்கில் அல்லது வாரக் கணக்கில் எடுத்துக்கொள்ளும்போது, அது அழிந்துவிடும். அதேசயம், இந்த வைரஸ் காற்றிலும் பல்வேறு பரப்புகளிலும் எத்தனை நாட்கள் உயிர்வாழக்கூடியது என்பது தொடர்பான ஆய்வு ஒன்று, New England Journal of Medicine என்ற மருத்துவ அறிவியல் பத்திரிக்கையில் வெளியாகியுள்ளது.
காற்றின் நீர்த்திவலைகளில் 3 மணி நேரம் வரை கொரோனா வைரஸ் உயிர்வாழக்கூடியது. தாமிரத்தால் ஆன உலோகப் பரப்புகளில் 4 மணி நேரம் வரை உயிர்வாழக்கூடியது. அட்டைப்பெட்டிகள் செய்யும் கார்ட்போர்டில் 24 மணி நேரமும், பிளாஸ்டிக் மற்றும் ஸ்டெயின்லஸ் ஸ்டீல் உலோகப் பரப்பில் 2 முதல் 3 நாட்கள் வரையும் வைரஸ் உயிர்வாழும். இது முழுமையாக ஆய்வகச்சூழலில் செய்யப்பட்ட பரிசோதனையில் கிடைத்த விவரங்கள் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, பொருட்கள் அல்லது பார்சல் டெலிவரி செய்யப்படும்போது, அவற்றில் கொரோனா வைரஸ் இருக்கும் என அஞ்சத் தேவையில்லை என்றும், இந்த வழிகளில் வைரஸ் பரவுவதற்கான சாத்தியங்கள் மிக மிகக் குறைவு என்றும் தொற்றுநோயியல் துறை வல்லுநர்கள் தெரிகின்றனர்.
Comments