ஒரே நாளில் 475 பேர் உயிரிழப்பு... இத்தாலியில் தொடரும் துயரம்

0 3668

கொரோனாவில் உயிரிழப்பு கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், இத்தாலியில் ஒரே நாளில் 475 பேர் உயிரிழந்திருப்பது அந்நாட்டு மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

சீனாவில் கொரோனாவால் நேற்று எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. ஆனால் இத்தாலியில் ஏற்கனவே கிட்டத்தட்ட 36 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் புதிதாக 4 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. முன்னதாக 3 ஆயிரம் பேர் உயிரிழந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 475 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இத்தாலியில் மட்டும் கடந்த 4 நாட்களில் கொலைகார கொரோனாவின் பாதிப்பால் ஏறத்தாழ ஆயிரத்து 500 பேர் மரணித்துள்ளனர்.

சீனாவை விஞ்சிய இந்த தொடர் உயிரிழப்பை கட்டுப்படுத்த முடியாமல் இத்தாலி அரசு திணறி வருவதைப் பார்த்து சர்வதேச நாடுகள் அதிர்ச்சியடைந்துள்ளன.

ஈரானில் ஒரே நாளில் 147 பேரும், ஸ்பெயினில் 105 பேரும் பலியாகி உள்ளனர். மேற்கண்ட நாடுகளுக்கு அடுத்தபடியாக பிரான்சில் 90 பேரும், அமெரிக்காவில் 41 பேரும் உயிரிழந்துள்ளனர்.

மொத்த உலக நாடுகளைப் பொறுத்தவரை நேற்று ஒரே நாளில் கிட்டத்தட்ட ஆயிரம் பேர் கொரோனாவால் கொல்லப்பட்டுள்ளதால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருவதால் பன்னாட்டு விமானங்களின் வருகைக்கு இஸ்ரேல் தடை விதித்துள்ளது.

இந்த நிலையில் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள சிரியா மற்றும் ஏமனில் கொரோனா குறித்த எந்த தகவலும் கிடைக்கப் பெறாததால் உலக சுகாதார அமைப்பு கவலை கொண்டுள்ளது. இந்த நாடுகளில் எந்த அடிப்படை மருத்துவ வசதிகளும் இல்லாத நிலையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் அதன் தாக்கம் கடுமையாக இருக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொற்று நோய் காரணமாக போர்ச்சுக்கல் நாடு அவசரநிலையை அறிவித்துள்ளது.

ஜோர்டான் தனது அனைத்து எல்லைகளையும் மூடுவதாக தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தில் ஏற்கனவே 104 பேர் இறந்துள்ள நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 33 பேர் மரணித்துள்ளனர். இதையடுத்து தலைநகர் லண்டனில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments