குடிமராமத்து திட்டம் மூலம் 14 ஆயிரம் நீர்நிலைகளும் தூர்வாரப்படும் - முதலமைச்சர்

0 3219

குடிமராமத்து திட்டம் மூலம் 14ஆயிரம் நீர்நிலைகளும் தூர்வாரப்படும் போது, மழைக்காலங்களில் நிலத்தடி நீர் அதிகரிக்க அது வகை செய்யும், என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை, பொதுப்பணித்துறைகளுக்கான மானிய கோரிக்கைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்தார். தொடர்ந்து பேசிய அவர் மதுரை அருகே உள்ள சுற்று சாலையில் மாநகராட்சி சார்பில் வசூலிக்கப்பட்டு வந்த கட்டணத்தால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை அடுத்து தற்போது சுங்கச்சாவடிகள் மூலமாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக முதலமைச்சர் கூறினார்.

பரிட்சார்த்த முறையில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட குடிமராமத்து பணிகளுக்கு, மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்ததால் 2017 -18ம் ஆண்டில் 330 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், 2018 -19ம் ஆண்டில் 499 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.

3 ஆண்டுகளில் 4,865 பணிகள் முடிந்துள்ளதாக தெரிவித்த முதலமைச்சர், திட்டம் நிறைவடையும்போது 14,000 நீர்நிலைகளும் தூர்வாரப்பட்டு இருக்கும் என்றார்.

கேரள முதல்வரை சந்தித்து பேசும் போது தமிழகம் - கேரளா இடையிலான நதிநீர் பிரச்சனைக்கு சுமூக தீர்வு காணப்படும் என்று தெரிவித்த முதலமைச்சர், அடுத்த 3 மாதத்தில் தேர்வாய் கண்டிகை நீர்தேக்கத் திட்டம் முடிவுற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிவித்தார்.

காவிரி - குண்டாறு இணைப்புத் திட்ட பணிகள் விரைவில் தொடங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பேசிய திமுக உறுப்பினர் செந்தில் பாலாஜி, அதிமுக ஆட்சியில் பொதுப்பணித்துறைக்கு குறைந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறினார். அதற்கு பதிலளித்துப் பேசிய முதலமைச்சர், மத்திய அரசின் நிதியை எதிர்பாராமல் காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு தமிழக அரசு 700 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருவதாக கூறினார்.

கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்திற்காக ஆந்திரா தெலுங்கானா முதலமைச்சர்களிடம் பேசியுள்ளதாகவும் விரைவில் நல்ல முடிவு எட்டப்பட்டு பணிகள் துவங்கும் என்றும் கூறிய அவர், 133 தடுப்பணைகள் கட்ட 692 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாகவும், திமுக ஆட்சியை விட அதிமுக ஆட்சியில் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments