ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நாளை முதல் கொரோனா பரிசோதனை மையம்
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நாளை முதல் கொரோனா பரிசோதனை மையம் செயல்படத்துவங்கும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனா பரிசோதனை செய்ய தனியார் மருத்துவமனைகளை அனுமதிப்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்பட உள்ளது.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பேசிய எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின், ராஜஸ்தான் மற்றும் அமெரிக்காவில் கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வரும் செய்திகள் குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், மருந்து கண்டுபிடிப்பது மற்றும் ஆராய்ச்சி நிலை குறித்து எம்ஜிஆர் மருத்துவ பல்கலைகழகத்தில் நடந்த சர்வதேச கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டதாகவும் விரைவில் நல்ல செய்தி கிடைக்கும் என்றார்.
கொரோனா அறிகுறிகள் இருப்பவர்கள், கொரோனா பாதிப்புள்ள நாடுகளிலிருந்து திரும்பியவர்கள் மட்டுமே, அதற்கான பரிசோதனையை செய்து கொள்வது அவசியம் என்றும், மற்றவர்கள் அனைவரும் பரிசோதனை செய்து கொள்வது கட்டாயமில்லை என்றும் அமைச்சர் தெளிவு படுத்தினார்.
தொடர்ந்து பேசிய திமுக உறுப்பினர் பொன்முடி, தனியார் மருத்துவ கல்லூரிகள், மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனைக்கு அனுமதி வழங்குவது குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர், தனியார் மருத்துவமனைகளில் இந்த வசதியை ஏற்படுத்த, மத்திய அரசு தான் ஆய்வு செய்து அனுமதி வழங்கவேண்டும் என தெரிவித்தார். தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கவும் தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளதாகவும், அவ்வாறு அனுமதி வழங்கப்பட்டால் அங்கு பரிசோதனை மேற்கொள்ள அரசே கட்டணம் நிர்ணயிக்கும் என்றும் தெரிவித்தார்.
Comments