கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கை : அரசுப் பேருந்துகளில் தீவிரம்,தனியார் பேருந்துகளில் மெத்தனம்
அரசுப் பேருந்துகளில் கொரோனா முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தனியார் ஆம்னி பேருந்துகள் எந்த ஒரு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் இயக்கப்பட்டு வருகின்றன.
சென்னையில் இருந்து வெளியூர் செல்கின்ற அரசுப் பேருந்துகளில் கொரோனா முன் எச்சரிக்கை நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
படுக்கை வசதி கொண்ட அரசுப் பேருந்துகளில் திரைச்சீலைகள் அகற்றப்பட்டு விட்டன. குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகளில் கம்பளி போர்வைகள் கொடுப்பதில்லை- பயணிகளே வீட்டில் இருந்து போர்வைகளை கொண்டுவர அறிவுறுத்தி உள்ளனர்.
பேருந்தின் கைப்பிடிகள் கிருமிநாசினி யால் துடைக்கப்பட்டபின்னரே பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். தொடர் விடுமுறை விடப்பட்டபோதும் பயணிகள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. அதே நேரத்தில் எந்த ஒரு பாதுகாப்பு ஏற்பாடும் செய்யப்படாத ஆம்னி பேருந்து நிலையத்தில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
அங்குள்ள பேருந்துகளில் கிருமி நாசினி எதுவும் தெளிப்பதில்லை என்றும், சோப்பு தண்ணீரால் துடைத்து விடுவதாகவும் கூறப்படுகின்றது. படுக்கைவசதி கொண்ட பேருந்துகளில் திரைச்சீலைகள் அகற்றப்படவில்லை. குளிர்சாதனப் பேருந்துகளில் கம்பளிப் போர்வை கொடுத்து வருகின்றனர். ஒருவர் பயன்படுத்தும் தலையணைகளை மற்றவர் பயன்படுத்துவதாலும் கொரோனா பரவும் என்ற முன் எச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை அப்பட்டமாக மீறப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், நகர்த்தும் கண்ணாடி ஜன்னல் வசதியின்றி முழுவதுமாக மூடப்பட்ட குளிர்சாதனப் பேருந்துகள் இயக்கப்பட கூடாது என்ற அரசின் உத்தரவையும் மீறி தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் செயல்படுவதாக புகார் எழுந்த நிலையில், கொரோனாவை காரணம் காட்டி வழக்கம் போல கட்டணமும் கூடுதலாகவே வசூலிக்கப்பட்டது.
Comments