கொரோனா வார்டு எப்படி இருக்கும் ? ஒரு நேரடி விசிட்
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை, தமிழக சுகாதாரத்துறை தீவிரப்படுத்தி வரும் நிலையில், கொரோனா நோய் பாதிக்கப்பட்டால் அவர்களை சிகிச்சைக்கு அனுமதிக்கும் வார்டு எப்படி இருக்கும் என்பதை நேரடி காட்சிகள் மூலம் விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...
தமிழகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக ஒவ்வொரு மாவட்டத்திலும் Isolation வார்டுகளும், கொரோனா சோதனைக்காக மாதிரிகளை சேகரிக்கும் மையமும் அமைக்கப்பட்டுள்ளது. ஐசோலேசன் வார்டு எப்படி இருக்கும் ? என்ன நடைமுறை அங்கு கடைப்படிக்க படுகிறது என்பதை அறிந்துக்கொள்ள சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள Isolation வார்டுக்கு விசிட் அடித்தோம்..
Isolation வார்டு முதல் தளத்தில் அமைந்துள்ள நிலையில், தரை தளத்தின் நுழைவு வாயிலிலேயே உள்ளே செல்பவர்களை விசாரித்து அனுமதிக்கின்றனர். குறிப்பாக, தரைத்தளத்தின் நுழைவு வாயிலில் இருந்து Isolation வார்டு அமைந்துள்ள தளம் வரை கிருமிநாசினிகள் தெளிக்கப்படுகின்றன. கைப்பிடி, கதவு, இருக்கைகள், லிப்ட் போன்றவற்றில் கிருமி நாசினிகளை தெளிக்கும் பணிகளை முகமூடி அணிந்த ஊழியர்கள் தொடர்ந்து மேற்கொள்கின்றனர்
முதல் தளத்தில் கொரோனா சிகிச்சை மற்றும் பரிசோதனை செய்யும் Isolation வார்டு அமைந்துள்ளது. நுழைவாயிலில் தடுப்பு அமைக்கப்பட்டு உள்ளே வருபவர்களின் விவரங்களை சுகாதாரப் பணியாளர்கள் பெறுகின்றனர். பரிசோதனை செய்யவும் சிகிச்சைக்காக அழைத்து வருபவர்களை தவிர்த்து மற்ற யாரும் உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை. இதனைக் குறிக்கும் வகையில் Strictly No entry என பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
கொரோனா அறிகுறி இருப்பதை உணர்ந்த ஏராளமானோர் பரிசோதனை செய்ய தாமாகவே வருகின்றனர். குறிப்பாக செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் மட்டும் சுமார் 30 பேர் வந்தது குறிப்பிடத்தக்கது. அவர்களிடமெல்லாம் விவரங்களை பெற்ற பின் பரிசோதனை செய்ய மருத்துவர்கள் அழைத்துச் செல்கின்றனர்.
இவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் , முழு உடலையும் சிறப்பு நீல நிற ஆடைகளால் மூடியவாறு இருக்கின்றனர். உடலில் கண்களை தவிர்த்து அனைத்து பாகங்களும் இந்த ஆடையால் மூடப்பட்டுள்ளன.
இதுபோன்ற முழு பாதுகாப்புடன் உள்ள குறிப்பிட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்களைத் தவிர்த்து மற்ற யாவரும் Isolation வார்டு உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை. தகவல் ஏதேனும் தேவைப்பட்டால் அவர்களே வெளியே வந்து பெற்றுச்செல்கின்றனர். உள்ளே அனுமதிக்கப்பட்டவர்களுக்கான உணவுகளைக் கூட வார்டில் உள்ள உதவியாளர்கள் வந்து பெற்றுச் செல்கின்றனர்.
இது ஒருபுறமிருக்க , கொரோனா சிறப்பு வார்டின் தரை தளத்தின் பின்புறம் உபயோகப்படுத்தப்பட்ட கிளவுஸ் , முகமூடிகள் , மருத்துவ கழிவுகள் , போன்றவை அகற்றப்படாமல் குவிந்து கிடந்தன.
அங்கு பணிபுரியும் துப்புரவுத் தொழிலாளர்கள் உரிய பாதுகாப்பு அம்சங்கள் இன்றி அந்த குப்பைகளை பிரித்துக் கையாளுகின்றனர் . இதுபோன்ற வற்றிலும் கூடுதல் கவனம் செலுத்தி சுத்தமாக பராமரித்தால் நோய்த்தொற்று எந்த வகையிலும் பரவாமல் தடுக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
Comments