ஐடி ஊழியர்களின் எதிர்பார்ப்பு என்ன ? அச்சுறுத்தும் கொரோனா

0 7279

வெளி நாடுகளுடன் நேரடி தொடர்பில் இருக்கும் சென்னை ஐடி நிறுவனங்கள் பலவற்றில் வீட்டில் இருந்தபடியே பணிசெய்யும் வசதியோ அல்லது விடுப்போ இதுவரை அறிவிக்கப்படாதது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் ஓ.எம்.ஆர் சாலை தொடங்கி சோழிங்கநல்லூர், சிறுசேரி, டி.எல்.எப். மகேந்திரா டெக்பார்க் வளாகங்களில் ஏராளமான ஐடி நிறுவனங்கள் செயல்பட்டுவருகின்றன.

காக்னிசெண்ட், டி.சி.எஸ், விப்ரோ, சென்னை ஒன், எச்.சி.எல் உள்ளிட்ட 1800 தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் மொத்தம் 6 லட்சம் கணினி பொறியாளர்கள் சுழற்சி முறையில் பணிபுரிந்து வருகின்றனர். 100 சதவீதம் வெளி நாட்டு வாடிக்கையாளர்களுக்காக கண்விழித்து வேலைபார்த்துவரும் இந்த நிறுவனங்களில் தமிழகம் மட்டுமல்லாது, வெளி மாநில ஊழியர்களும் அதிகம் பணி புரிந்து வருகின்றனர். இந்த நிருவனங்களில் வெளி நாடுகளை சேர்ந்தவர்கள் முக்கிய பொறுப்புகள் வகித்து வருகின்றனர்.

அடிக்கடி வெளிநாடு பயணங்களும் மேற்கொண்டு வருவதால் முதலில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக விடுப்பு அறிவிக்கப்பட வேண்டியதே முதலில் ஐடி நிறுவனங்கள் தான் என்று சுட்டிக்காட்டப்படுகின்றது

கொரோனா பீதியை தொடர்ந்து ஐடி நிருவனங்களில் பணிபுரியும் கணினி பொறியாளர்களின் மன அழுத்தத்தை குறைக்க அமைக்கப்பட்டிருந்த ஜிம், நொறுக்குதீனி மற்றும் துரித உணவுகளை தடையின்றி வழங்கி வந்த கேப்டீரியா, ரிலாக்ஸ் பார்க் உள்ளிட்டவை மூடப்பட்டு உள்ளது.

ஆனால் கொரோனா பரவலை தடுக்க வீட்டில் இருந்தே பணி செய்யும் நடைமுறையை ஷோகோ போன்ற சில நிறுவனங்கள் மேற்கொண்டிருந்தாலும், ஊழியர்களை வீட்டில் இருந்து பணி செய்ய அறிவுறுத்த இயலாமல் 57 சதவீத ஐ.டி நிறுவனங்கள் தவித்து வருவதாக கூறப்படுகின்றது.

தங்களது நிறுவன தொழில் நுணுக்கங்கள் மற்றும் வெளி நாட்டு வாடிக்கையாளர்களின் தொழில் ரகசியங்கள் வெளியில் சென்று விடும் என்ற அச்சம் ஒரு புறம் இருந்தாலும், வீடுகளில் இருந்து பணி செய்யும் ஊழியர்களுக்கு லேப்டாப்களில் குறிப்பிட்ட சாப்ட்வேர்களை பதிவேற்றம் செய்வதில் தொடங்கி , இணையதள வேகம் , உண்மையிலேயே தொடர்ந்து பணிபுரிகிறார்களா என்பதை கண்டுபிடிக்க இயலாமை போன்ற குழப்பங்களால் இதனை பின்பற்ற இயலாமல் தினறி வருகின்றனர்.

அதே நேரத்தில் தினமும் பணிக்கு வரும் ஊழியர்களை முழுமையான மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் சானிடைசர் மற்றும் ஆல்கஹால் ரப்பால் கைகளை கழுவிய பின்னரே நிறுவனத்திற்குள் அனுமதிக்கின்றனர். சம்பந்தபட்ட ஊழியர்கள் அமரும் கணினி சேர் டேபிள் முழுமையாக சுத்தப்படுத்திய பின்னர் அமரும் ஊழியர் இடையில் எழுந்திருக்க அனுமதி இல்லை என்று கூறப்படுகிறது.

மதிய உணவு வேண்டும் என்றால் காலையிலேயே தகவல் தெரிவித்து விட வேண்டும் எனவும் தொடர்ச்சியான பணி சுமையால் எழுந்திருக்க கூட இயலாமல் கடுமையான மன அழுத்தத்துடன் ஐடி ஊழியர்கள் பணிபுரிவதாகவும் அவர்கள் வீட்டில் இருந்தபடியே பணி செய்ய தேவையான ஏற்பாடுகளை செய்ய, ஐடி நிறுவனங்களை அரசு வலியுறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

 

அதே நேரத்தில் சென்னையில் உள்ள பெரும்பாலான கார்பரேட் செய்தி நிறுவனங்களில் வீட்டில் இருந்தே பணி செய்யும் அறிவிப்பு நடைமுறைக்கு வந்து விட்டது குறிப்பிடதக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments