செம்மொழியான தேன்மொழியே..! கொரோனா பீதியிலும் குதுகலம்

0 6499

கொரோனா முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, மக்கள் மொத்தமாக கூடுவதை தவிர்க்க பூங்காக்களும், வணிகவளாகங்களும், திரையரங்குகளும் மூடப்பட்டு சென்னையின் முக்கிய சாலைகள் வெறிச்சோடி கிடக்க, செம்மொழி பூங்காவில் அமர்ந்து தேன் மொழியால் பேசிக் கொண்டிருந்த 50க்கும் மேற்பட்ட காதல் ஜோடிகள் விரட்டி விடப்பட்டனர். 

சென்னை வாகன நெரிசலின் முகவரியான அண்ணாசாலையில் ஆள் அரவம் இல்லை..!

மக்கள் கூடும் மால்களுக்குள் நுழையவே அனுமதி இல்லை..!

பள்ளிக்கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் பூங்காக்களில் கூடிவிட போகிறார்கள் என்று அத்தனை பூங்காக்களும் இழுத்து மூடப்பட்டு விட்டது.

ஆனால் சென்னை ஜெமினி மேம்பாலம் அருகே உள்ள செம்மொழி பூங்காவிற்கு இந்த அறிவிப்பு கிடைக்க சற்று காலதாமதமானதால் வழக்கம் போல பூங்கா கதவுகள் திறந்திருந்தன.

காலை 11 மணிக்கெல்லாம் பூங்காவில் உள்ள இருக்கைகளையும், மூங்கில் புதர்களையும் காதல் ஜோடிகள் ஆக்கிரமித்துக் கொண்டனர்.

காதல் வைரஸ் தாக்குதலுக்குள்ளானவர்கள், கொரோனா வைரஸை பற்றி கவலை கொள்ளாமல் செம்மொழி பூங்காவில், தேன்மொழியில் பேசிக் கொண்டிருந்தனர் ..!

கொரோனா பீதியில் சிட்டியே டல்லாக காட்சி தந்த நிலையில் காதலர்களின் வருகையால் செம்மொழி பூங்கா கொரோனாவுக்கே டஃப் கொடுத்துக் கொண்டிருந்தது

12 மணி அளவில் கொரோனா எச்சரிக்கை அறிவிப்பு செம்மொழி பூங்கா நிர்வாகத்துக்கு வந்து சேர புதர் மறைவில் எதிர்காலம் குறித்து குதுகலமாக பேசிக்கொண்டு இருந்த காதல் ஜோடிகளையும் அவர்களை வேடிக்கை பார்க்க வந்தவர்களையும் பூங்கா காவலாளிகள் விரட்ட தொடங்கினார்.

50க்கும் மேற்பட்ட காதல் ஜோடிகள், 11 மணி காட்சி முடிந்து தியேட்டரில் இருந்து கூச்சத்துடன் வெளியே வருவது போல ஒவ்வொருவராக முகத்தை மூடிக்கொண்டு வெளியேறினர்

பூங்காவிற்குள் இத்தனை ஜோடிகள் இருந்ததா ? என்பதை பார்த்து பூங்கா ஊழியர்களே மிரண்டு போயினர். இருந்தாலும் சில காதல் ஜோடிகள், கொரோனாவெல்லாம் தங்களை தடுத்து விட முடியுமா என்று பூட்டப்பட்ட பூங்கா வாசலில் அமர்ந்து அன்பை பறிமாற தொடங்கினர்..!

காதல் வைரஸை விட, கொரோனா வைரஸ் கொடியது என்பதை அனுபவ பூர்வமாக உணராதவரை நம்மவர்கள் அரசின் எந்த ஒரு முன்எச்சரிக்கை நடவடிக்கையையும் பின்பற்றாமல் ஏளனம் மட்டுமே செய்து கொண்டிருப்பார்கள் என்பதே கசப்பான உண்மை..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments