கண்கட்டி வித்தை காட்டி திருடிய வெள்ளைக்கார கொள்ளையர்கள்
தஞ்சாவூரில் ரூபாய் நோட்டின் மதிப்பு குறித்து சந்தேகம் கேட்பதுபோல் வந்து ஆட்டோமொபைல் கடைக்காரனின் கவனத்தை திசை திருப்பி 11 ஆயிரம் ரூபாயை திருடிச் சென்ற வெளிநாட்டுத் தம்பதியை சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர் கொடிமரத்து மூலை பகுதியில் பார்த்தசாரதி என்பவர் பி.எஸ்.ஆர் ( PSR ) ஆட்டோமொபைல்ஸ் என்ற பெயரில் வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.
திங்கட்கிழமை மதியம் சுற்றுலாப் பயணிகள் தோற்றத்தில் இவரது கடைக்கு ஒரு வெளிநாட்டுத் தம்பதி வந்துள்ளது. வெளிநாட்டுப் பெண் கடையில் இருந்த ஊழியரிடம் பேச்சுக்கொடுக்க, அவரோடு வந்த நபர் தான் வைத்திருந்த சில இந்திய ரூபாய் நோட்டுகளை எடுத்துக் காட்டி, அவற்றின் மதிப்பு என்ன என்று பார்த்தசாரதியிடம் கேட்டுள்ளான்.
பார்த்தசாரதி அதன் மதிப்பைக் கூறவே, 2 ஆயிரம் ரூபாய் தாள் ஒன்றைக் காட்டி சில்லறை வேண்டும் என்று கேட்டுள்ளான். அவரும் பணம் வைத்திருந்த பையை எடுத்து சில்லறையை தேடியுள்ளார்.
அப்போது, அவரிடம் இருந்த ரூபாய் நோட்டுகளின் மதிப்பை கேட்பது போல் பாவனை செய்து, பணத்தை லாவகமாக திருடி சென்றுள்ளான். இந்தக் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.
மாலை கல்லாவில் இருந்த பணத்தை எண்ணியபோது 11 ஆயிரம் ரூபாய் குறைந்தது தெரியவந்தது. சிசிடிவி கேமராவை ஆராய்ந்த பிறகே, தான் ஏமாற்றப்பட்டதை பார்த்தசாரதி உணர்ந்துள்ளார். அந்தக் காட்சிகளை அடிப்படையாக வைத்து திருட்டு வெளிநாட்டுத் தம்பதியை போலீசார் தேடி வருகின்றனர்.
கடந்த ஆண்டு திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையிலுள்ள மளிகைக் கடை ஒன்றில் இதே பாணியில் ஒரு வெளிநாட்டுத் தம்பதி பணம் சுருட்டியதை சுட்டிக்காட்டும் போலீசார், திருடர்கள், மோசடிக்காரர்களுக்கு இனம், மொழி, நிறம் என எதுவும் கிடையாது என்றும் எப்போதும் கவனத்தோடு இருக்க வேண்டும் எனவும் எச்சரிக்கின்றனர்.
Comments