தமிழகத்தில் கொரோனா அறிகுறிகளுடன் 37 பேர் மருத்துவ கண்காணிப்பு

0 9292

வெளிநாடுகளுக்கு சென்ற மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து தமிழகம் வந்த 37 பேர் கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு மருத்துவக் குழுவினரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

துபாயில் இருந்து சென்னை வந்த 5 பெண்கள் உட்பட 14 பேருக்கு, கொரோனாவா? என்ற சந்தேகத்தால், பூந்தமல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு பொது சுகாதார நிறுவனத்தில், மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த 14 பேரில், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் 9 பேரும், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 3 பேரும், புதுச்சேரியை சேர்ந்த 2 பேரும் அடங்குவர். இவர்கள், டென்மார்க், சுவீடன், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் பணியாற்றுபவர்களாகவும், சிலர் சுற்றுலா சென்றவர்கள் என்றும் சொல்லப்படுகிறது.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உள்ள தனிவார்டில், இரண்டு பேர் கொரோனா தொற்றுநோய் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் அமெரிக்காவிலிருந்து லண்டன் வழியாக சென்னை திரும்பியவர். மற்றொருவர் டெல்லியில் இருந்து வந்திருப்பது தெரியவந்துள்ளது.

சவுதியின் ரியாத் மற்றும் துபாயில் இருந்து நேற்று மதுரை விமான நிலையத்திற்கு தனி தனியாக வந்த ராமநாதபுரம் கீழக்கரையைச் சேர்ந்த இருவர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அப்போது அவர்களுக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதால் சுகாதாரத்துறையினரின் அறிவுறுத்தலின் பேரில் ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு தனிமைப்படுத்தப்பட்ட சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்ட இருவரும், தொடர்ந்து மருத்துவக் குழுவினரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள அடைய கருங்குளம் பகுதியைச் சேர்ந்த நபர், கேரளாவில் தேங்காய் பறிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். அண்மையில் ஊர் திரும்பிய அவருக்கு, கொரோனா அறிகுறிகள் இருக்கலாம் என்ற சந்தேகத்தில், திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேபோன்று, ஸ்ரீவில்லிப்புத்தூரை அடுத்த மம்சாபுரம் பகுதியைச் சேர்ந்த ஒருவர், கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள கல்லூரியொன்றில், பேராசிரியராக பணியாற்றி வருகிறார். 2 தினங்களுக்கு முன்பு ஊர் திரும்பிய அவர், தொடர் காய்ச்சல், சளி போன்ற கொரோனா பாதிப்பு அறிகுறிகள் இருந்ததால், ஸ்ரீவில்லிப்புத்தூர் அரசு மருத்துவமனையின் தனிவார்டில் அனுமதிக்கப்பட்டார்.

இதனிடையே, துபாய் மற்றும் அபுதாபியில் இருந்து சென்னை வந்த 17 பேர் பூந்தமல்லியில் உள்ள திருவள்ளூர் மாவட்ட சுகாதார மையத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

காலை மற்றும் முற்பகல் நேரத்தில் பரபரப்பாக காணப்படும் அண்ணா சாலை, கொரோனா அச்சுறுத்தலால் வழக்கத்திற்கு மாறாக வெறிச்சோடிக் காணப்பட்டது. பள்ளி, கல்லூரிகள் செல்வோர், அலுவலகம் செல்வோர், பல்வேறு அலுவல் நிமித்தமாக செல்வோர் என, காலை நேரத்தில் வாகனங்கள் விரையும் அண்ணா சாலையை பார்த்தாலே பரபரப்பு தொற்றிக் கொள்ளும்.

சிக்னலில் காத்திருக்கும் வாகனங்கள், சாலையை கடக்கும் பாதசாரிகள், பேருந்து நிறுத்தங்களில் காத்திருக்கும் கூட்டம் என அலுவல் நாட்களின் அடையாளத்தோடு காணப்படும். ஆனால் இன்று காலை, அரசுப் பேருந்துகள் தவிர்த்து ஒரு சில வாகனங்கள், அங்கொன்றும் இங்கொன்றுமாக சில பாதசாரிகள் என அண்ணா சாலை நெடுகிலும் வெறிச்சோடி காணப்பட்டது.

அரசு, தனியார் கல்வி நிலையங்கள் அனைத்திற்கும் விடுமுறை, சில அலுவலகங்கள் வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டது உள்ளிட்ட காரணங்களால் சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்து மிகவும் குறைந்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் மத்திய சிறைகள், மற்றும் மாவட்ட சிறைகள், பெண்கள் சிறைகள் உள்ளிட்ட அனைத்து சிறைகளிலும் கைதிகளை பார்வையாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் சந்திக்க இன்று முதல் 2 வாரகாலத்துக்கு தடைவிதிக்கப்பட்டு உள்ளது. மேலும் முக்கியமான வழக்குகளில் அவசியம் தேவைப்பட்டால், சிறைவாசி மற்றும் வழக்கறிஞர் ஆகியோரை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்பு 6 தூர இடைவெளிவிட்டு சந்திக்கவேண்டும் என்றும் சிறைத்துறை உத்தரவிட்டுள்ளது.

சீனா, தென்கொரியா இத்தாலி உள்ளிட்ட ஏழு நாடுகளில் இருந்து தமிழகம் திரும்பிய 41 பேர் சென்னை அடுத்த பூந்தமல்லியில் உள்ள சுகாதார பயிற்சி மையத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். அவர்களில் 18 பேர் அவர்களது வீட்டில் இருந்த படியே தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருக்க, தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில்  கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெறுகிறது.   எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வருகிறார்கள் என்பதால்,அவர்களுக்கு  உடல் வெப்பம் பரிசோதிக்கப்படுவதோடு சளி,இருமல்,காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். மேலும் 15 நிமிடத்திற்கு ஒருமுறை நடைமேடைகளில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. 

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் எடுக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை இணை இயக்குநர் சிவஞானம் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அங்கு, வெளிமாநிலங்களில் இருந்து வரும் பயணிகள் மட்டுமில்லாமல், அனைத்து பயணிகளுமே உடல் வெப்ப கருவி மூலம் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இந்த சோதனையில் உடல் வெப்பம் 35 டிகிரி செல்சியஸுக்கு அதிகமாக இருக்கும் பயணிகளின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு மருத்துவ அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன.

ரயில் நிலையத்தில் இருந்து பயணிகள் வழக்கமாக வெளியேறும் வழிகள் மூடப்பட்டு பயணிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாம் வழியாக செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கல்வி நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டு உள்ள தொடர் விடுமுறை காரணமாக ,  கல்லூரி மாணவ - மாணவிகள் சொந்த ஊர் திரும்புவதால் சென்னை -கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கூட்டம் அலைமோதியது.

குறிப்பாக, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், புதுச்சேரி, தர்மபுரி, சேலம் உள்ளிட்ட ஊர்களுக்கு, அதிகமானோர் பயணம் செய்ததை காண  முடிந்தது.

கொரோனா தொடர்பான விழிப்புணர்வு பிரசுரங்களை பேருந்து நிலைய வளாகத்தில் விநியோகித்த சுகாதாரத்துறை ஊழியர்கள், பயணிகள் ஒவ்வொருவரிடமும்  உடல் வெப்ப  பரிசோதனையையும் நடத்தினர்.

ஒரே இடத்தில் அதிகம் கூடுவதை தவிர்க்க வேண்டும் -  வெளியூர்களுக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டிருந்த போதிலும் பாதுகாப்பு கருதி, மாணவர்கள், சொந்த ஊர் செல்வதையே விரும்புகிறார்கள்.

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்திலும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளவேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கொரோனா அச்சம் மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகளால் பயணிகளின் எண்ணிக்கை குறைந்து விமான நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. சுமார் 200 விமான சேவைகளை உள்ளடக்கிய உள்நாட்டு முனையத்தில் பயணிகள் குறைவு காரணமாக இன்று மட்டும் 27 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டது. ஏற்கனவே பன்னாட்டு முனையத்தில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

கொடைக்கானலில் நகராட்சி மற்றும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து சுற்றுலாத்தலங்களும் மூடப்பட்டதால், பஸ் நிலையம் மற்றும் ஏரிச் சாலை பகுதிகளில் வாகனப்போக்குவரத்து குறைந்து வெறிச்சோடி காணப்பட்டது.

இதற்கிடையே நாளை முதல் வத்தலகுண்டு- கொடைக்கானல் மற்றும் பழனி - கொடைக்கானல் சாலையில் வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை தடை விதிக்கப்படுவதாகவும், உள்ளூர் மக்களுக்கு தடை இல்லை என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தலால் திருப்பூரில் பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் மூடப்பட்டு மக்கள் நடமாட்டம் குறைந்தது. பேருந்து, ரயில் நிலையங்கள் மற்றும், நகரின் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு இலவச முக கவசம், சானிடைசர் ஆகியவற்றை வழங்கி வருகிறது.  கொரோனா தடுப்பு நடவடிக்கையாகவும், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் இதனை செய்வதாக பெட்ரோல் பங்க் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.\

கொரோனா அச்சுறுத்தலால் காஞ்சிபுரத்தில் பட்டு புடவை வியாபாரம் முடங்கியது பெரும்பாலும் ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து நாள்தோறும் ஏராளமானோர் வந்து செல்லும் நிலையில் தற்போது வாடிக்கையாளர்களின்றி ஜவுளிக்கடைகள் வெறிச்சோடி காணப்பட்டது.  

கோவை அனைத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள், திரையரங்குகள், பூங்காக்கள் மூட்டப்பட்டதால், மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். இதனால் நகரின் முக்கிய பகுதிகள் மக்கள் நடமாட்டம் அதிகமின்றியும், வாகன போக்குவரத்து அதிகம் இல்லாமலும் வெறிச்சோடி காணப்பட்டன.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் திருத்தணி முருகன் கோயிலில், கொரானா அச்சுறுத்தல் காரணமாக கூட்டம் வெகுவாக குறைந்தது. இதனால் முன் எப்போதும் இல்லாத வகையில் 5 நிமிடத்தில் சாமிதரிசனம் செய்து செல்கின்றனர்

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில், பிரசித்திபெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயத்துக்கு பக்தர்கள் வருகை குறைந்ததால், நாள் ஒன்றுக்கு 6 முறை நடைபெற்ற திருப்பலிகள் மூன்றாக குறைக்கப்பட்டுள்ளன. பொது சுகாதாரத்துறை சார்பில் தேவாலயம் மற்றும் ரயில்களில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் வருகை குறைவால் பேருந்து நிலையம், கடை வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.

புதுச்சேரியில் பள்ளிகள் மற்றும் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து வெறிச்சோடி காணப்பட்டது. அரவிந்தர் ஆசிரமம், மணக்குள விநாயகர் கோவிலுக்கு பக்தர்கள் வருகை குறைந்ததது. வெளி மாநில சுற்றுலா வாகனங்கள் மற்றும் பயணிகள் நோய் தொற்று சோதனைக்கு பின்பு அனுமதிக்கப்பட்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments