கமல்நாத் அரசுக்கு இன்றைக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவு

0 1341

மத்திய பிரதேச மாநிலத்தில் ஆளுநர் முன்னிலையில் பா.ஜ.க.106 எம்.எல்.ஏ.க்களின் அணிவகுப்பை நடத்தியுள்ளது. கமல்நாத் இன்றைக்குள் பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறினால் ஆட்சியை இழக்க நேரிடும் என்று ஆளுநர் எச்சரித்துள்ளார்.

ஜோதிராதித்ய சிந்தியா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 22 பேர் ராஜினாமா கடிதங்களைக் கொடுத்த நிலையில் அமைச்சர்களாக இருந்த 6 பேரின் ராஜினாமாவை மட்டும் சபாநாயகர் ஏற்றுக்கொண்டார். இதையடுத்து கமல்நாத் அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது. இந்நிலையில் நேற்று பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கிய போது முதலமைச்சர் கமல்நாத் பெரும்பான்மையை நிருபிக்க ஆளுநர் லால்ஜி தாண்டன் உத்தரவிட்டதை அடுத்து காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.சபாநாயகர் பிரஜாபதி கொரோனாவை காரணம் காட்டி அவையை வரும் 26-ஆம் தேதி வரை ஒத்திவைத்தார்.

இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் பா.ஜ.க.வின் 106 எம்.எல்.ஏ.க்களின் அணி வகுப்பை ஆளுநர் லால்ஜி தாண்டன் முன்னிலையில் நடத்தினார். 106 பேரின் கையெழுத்திட்ட கடிதத்தையும் அவர் ஆளுநரிடம் வழங்கினார்.

முதலமைச்சர் கமல்நாத் தனது அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்பதை நன்கு தெரிந்து வைத்திருப்பதாகவும், எனவே நம்பிக்கை வாக்கெடுப்பில் இருந்து புறமுதுகிட்டோடியிருப்பதாகவும் குற்றம்சாட்டிய சிவராஜ் சிங் சவுகான், அவரது அரசை கொரானா வெகுகாலத்துக்கு காப்பாற்ற முடியாது என்றார்.

இந்நிலையில் முதலமைச்சர் கமல்நாத் இன்றைக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வலியுறுத்தியுள்ள ஆளுநர், நம்பிக்கை வாக்கெடுப்புக்கான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் அரசு பெரும்பான்மை இழந்ததாகக் கருதப்படும் என எச்சரித்துள்ளார்.

இதனிடையே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரி சிவராஜ் சிங் சவுகான் மற்றும் 9 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுக்கள் இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments