பரவும் கொரானோ - தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக்கும் இந்தியா
இந்தியாவில் கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்போரின் எண்ணிக்கை 114ஆக அதிகரித்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து வருவோரில் பலரும் கொரோனா அறிகுறிகளுடன் இருப்பதால், விமான நிலையங்கள், துறைமுகங்களில், தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
இத்தாலி உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் வந்தவர்களாலும், வருபவர்களாலும், இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 114ஆக அதிகரித்துள்ளதாக, மத்திய அரசின் சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த 114 பேரில், 17 பேர் வெளிநாட்டினர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக, மகாராஷ்டிரா மாநிலத்தில், 32 பேரும், கேரளாவில் 23 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா பாதிப்பு எதிரொலியால், ஒடிசா மாநில அரசு மேலும் பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவித்திருக்கிறது. தங்கள் மாநிலத்திற்கு வரும் வெளிநாட்டினர் அனைவரும், கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்றும், அவர்கள் 14 நாட்கள் தனிமை கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள் என்றும் ஒடிசா அரசு கூறியிருக்கிறது.
கொரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கையின் ஒருபகுதியாக, பீகார் மற்றும் சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நியூயார்க்கில் இருந்து டெல்லி வந்த யுனைடெட் ஏர்லைன்ஸ் (United Airlines) விமானத்தில், இந்தியர் ஒருவருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டதால், லண்டன் ஹீத்ரு விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது.
அசாம் மாநிலத்தில், அரசு ஊழியர்கள், மற்றும் தனியார் நிறுவனங்களில், பயோ மெட்ரிக் வருகைப் பதிவேடு முறைக்கு, வருகிற 31ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் கொரானா பாதிப்பு அதிகம் பதிவாகி இருப்பதால், அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே, தலைமைச் செயலாளர் ஆகியோர் மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினர்.
டெல்லியில் ஐம்பதுக்கு மேற்பட்டோர் ஒன்று கூடுவதற்குத் தடை விதிக்கப்படுவதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். ஷாகீன்பாக்கில் நடைபெற்று வரும் போராட்டத்துக்கும் இந்தத் தடை பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குவங்க மாநிலத்தில், அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு வருகிற ஏப்ரல் 15ஆம் தேதி வரை விடுமுறை விடப்படுவதாக, முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். மும்பையில் உள்ள பிரபல சித்தி விநாயகர் ஆலயம் காலவரையின்றி,மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து டெல்லியில் மத்திய அமைச்சர்கள் ஒன்றுகூடி அவசர ஆலோசனை நடத்தினர். மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்செரிக்க நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்துவது குறித்து விவாதித்தனர்.
Comments