தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கொரானா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்

0 2228

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கொரானா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகங்கள் தீவிரப்படுத்தியுள்ளன. சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் தீவிர கண்காணிப்பிற்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். மக்கள் அதிகம் கூடும் இடங்களில்  கிருமி நாசினி தெளிப்பதோடு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகிறது. 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் வரும் சுற்றுலா பயணிகள் தீவிர மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.மேலும் சுற்றுலா பயணிகளின் விபரங்களும் சேகரிக்கப்படுகின்றன.

கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்பு கூட்டத்தின் போது, கைகளை சுத்தமாக வைத்துக்கொள்வது தொடர்பாக ஆட்சியர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் அவர் தனது கைகளை சானிட்டைசர் மூலம் சுத்தம் செய்ததோடு பொதுமக்களுக்கும் சானிட்டைசரை வழங்கினார்.

காஞ்சிபுரத்தில் மக்கள் குறைதீர் கூட்டத்தின் போது விழிப்புணர்வு ஏற்படுத்திய நிலையில், சானிட்டைசர் மூலம் கை கழுவிய பிறகே பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பக்தர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு உள்ளே அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

சத்தியமங்கலம் அருகே தமிழக -கர்நாடக எல்லையில் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. பண்ணாரி சோதனை சாவடியில், வெளிமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களின் விபரங்களும் சேகரிக்கப்படுகிறது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கிருமி நாசினி தெளிக்கப்படுவதோடு,   சளி,  இருமல், காய்ச்சலை கட்டுப்படுத்த  பக்தர்களுக்கு  இயற்கை மூலிகை மருந்துகள் வழங்கப்படுகின்றன. 

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தீவிர பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். கொரானா வராமல் தடுக்க எவ்வாறு தூய்மையாக இருக்க வேண்டும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. 

மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகளுக்கு வரும் 31 ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் திருவள்ளூரில் தனியார் பள்ளிகள் செயல்படுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 50 சதவீதத்திற்கும் அதிகமான பள்ளிகள் அரசின் உத்தரவை மீறி செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தலால் ஒகேனக்கல் அருவியில் குளிக்க மற்றும் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது. கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு வருவதைத் தவிர்க்கும் விதமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனால், சுற்றுலா பயணிகள் நிறைந்து காணப்படும் ஒகேனக்கல் பேருந்து நிலையம், நடைபாதை, முதலைப்பண்ணை உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும், பக்தர்கள் அனைவரும் மருத்துவக்குழுவின் தீவிர பரிசோதனைக்கு பின்னரே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சேலம் உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. மேலும், அங்கு மருத்துவ முகாம் அமைத்து வைரஸ் குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஈரோடு மாவட்டம் அந்தியூரில் சுகாதாரத்துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையம் மற்றும கோயில்களில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டை கால பைரவர் கோயில் அஷ்டமி பூஜைக்கு வந்த வெளிமாநில பக்தர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். மேலும், உள்ளூர் பக்தர்களும் மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு உபகரணங்களை அதிக விலைக்கு விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் பிரபாகர் தெரிவித்துள்ளார். சோதனை சாவடிகளில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாம்களை ஆய்வு செய்த அவர் இதனை தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments