குழிக்குள் படுத்து பங்குத் தந்தை ரகளை..! அரசு நிலம் தேவாலய நிர்வாகத்தால் வளைத்துப் போடப்பட்டதாக புகார்

0 9937

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் தேவாலய நிர்வாகத்தால் வளைத்துப் போடப்பட்டதாகக் கூறப்படும் அரசுக்கு சொந்தமான இடத்தில் சார்பதிவாளர் அலுவலத்துக்கு அடிக்கல் நாட்ட வந்த எம்.எல்.ஏ வை தேவாலய நிர்வாகிகள் தடுத்து நிறுத்தினர். அடிக்கல் நாட்ட தோண்டப்பட்ட குழிக்குள் படுத்து பங்குத் தந்தை நடத்திய போராட்டம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி...

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் அண்மையில் நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தூத்துக்குடி வட்டத்துக்கு உட்பட்ட புதுக்கோட்டை பகுதியில் புதிதாக பத்திரப்பதிவு அலுவலகம் கட்டப்படும் என அறிவித்திருந்தார். அதற்கான இடம் தேர்வு செய்வதற்கான ஆய்வின்போது, அங்குள்ள புனித ஜோசப் தேவாலய வளாகத்துக்குள் அரசுக்குச் சொந்தமாக 90 செண்ட் நிலம் இருப்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அதில் 20 செண்ட் இடத்தில் பத்திரப்பதிவு அலுவலகம் கட்ட முடிவு செய்யப்பட்டது. ஆனால் அந்த இடம் தங்களுக்குச் சொந்தமானது எனவும் அங்கு பத்திரப்பதிவு அலுவலகம் கட்ட அனுமதிக்க முடியாது எனவும் எதிர்ப்பு தெரிவித்த தேவாலய தரப்பு, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அங்கு பத்திரப்பதிவு அலுவலகத்துக்கான அடிக்கல் நாட்ட ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகநாதன் தலைமையில் அதிகாரிகள் சென்றுள்ளனர்.

இதனையறிந்த தேவாலயம் தரப்பு, ஆண்கள் பெண்கள் என 50க்கும் மேற்பட்டோரைத் திரட்டி வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

போலீசார் உதவியுடன் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் அடிக்கல் நாட்டுவதற்காக கடப்பாரை கொண்டு சட்டமன்ற உறுப்பினர் சண்முகநாதன் சிறிய அளவில் பள்ளம் தோண்டினார். அப்போது பங்குத்தந்தை தலைமையில் தேவாலய தரப்பினர் அடிக்கல் நாட்ட விடாமல் தடுத்து ரகளையில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில் அடிக்கல் நாட்ட தோண்டப்பட்ட குழிக்குள் ஒருவர் அமர்ந்துகொள்ள, அவர் மீது பங்குத் தந்தை சென்று படுத்துகொண்டார். அவரைச் சூழ்ந்து ஆண்களும் பெண்களும் அமர்ந்துகொண்டு, குழந்தைகள் போல் அழுது அடம் பிடித்தனர்.

போலீசார் எவ்வளவோ முயன்றும் அவர்களை அப்புறப்படுத்த முடியவில்லை. இதனையடுத்து எம்.எல்.ஏ சண்முகநாதனும் அவருடன் வந்த அதிகாரிகளும் அடிக்கல்நாட்டும் திட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

இதுகுறித்து பேசிய வருவாய் ஆய்வாளர், அரசுக்கு சொந்தமான 90 செண்ட் இடத்தை தேவாலய நிர்வாகத்தினர் வளைத்துப் போட்டுக்கொண்டு தங்களுக்குச் சொந்தமானது என கூறி வருகின்றனர் என்றார்.

இந்த 90 செண்ட் இடத்தில் 20 செண்டில் தான் அலுவலகம் கட்டப்படவிருக்கிறது என்றும், இந்த இடம் அரசு புறம்போக்கு இடம்- தனியார் யாரும் உரிமை கொண்டாட முடியாது என்றும் கூறினார்.

தேவாலயம் தரப்பினரோ, 100 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த இடம் தங்கள் பராமரிப்பில் இருப்பதாகவும் இடத்துக்கான பட்டா தங்கள் வசம் இருப்பதாகவும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப் போவதாகவும் கூறினர்.

புதுக்கோட்டையில் சம்மந்தப்பட்ட அந்த இடத்தில் அலுவலகம் அமைக்க தடை ஏற்படும் பட்சத்தில் சுமார் 15 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள வாகைக்குளம் பகுதிக்குத்தான் செல்ல நேரிடும் என்று கூறப்படுகிறது.

தூத்துக்குடி அருகே கத்தோலிக்க தேவாலயம் தரப்பால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் அரசு நிலத்தில், பத்திரப்பதிவு அலுவலகம் கட்டும் பணிகள் கண்டிப்பாக தொடர்ந்து நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் உறுதிபட தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையிலுள்ள புனித ஜோசப் தேவாயலய வளாகத்துக்குள் உள்ள அந்த நிலத்தில், சார்பதிவாளர் அலுவலகத்துக்கான அடிக்கல் நாட்ட வந்த எம்.எல்.ஏ வை, தேவாலய தரப்பினர் தடுத்து நிறுத்தினர்.

இதனையடுத்து ஊர் பொதுமக்கள் அங்கு பணிகள் நடைபெற நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் முறையிட்டனர். அந்த இடம் அரசு நிலம் தான் என்றும் அங்கு கண்டிப்பாக பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் அவர் உறுதிபடக் கூறினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments