இன்றைய சட்டப்பேரவை நிகழ்வுகள்..!
எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு அமைச்சர் ஆர்.பி.,உதயகுமார் பதில்
இஸ்லாமிய மக்களுக்கு அதிமுக எப்பொழுதும் பாதுகாப்பு அரணாக விளங்கும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், சிஏஏ தொடர்பாக இஸ்லாமிய அமைப்புகளுடன் தலைமை செயலாளர் நடத்திய ஆலோசனையில் விவாதிக்கப்பட்ட கருத்துக்களை பேரவைக்கு தெரிவிக்கவேண்டும், அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், இஸ்லாமிய மக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்கும் வகையில் முதலமைச்சர் பழனிசாமியின் அறிவுறுத்தலின்படி தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்தியதாக கூறினார். என்.பி.ஆர். குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.
திருவாலங்காடு அருகே துணை மின் நிலையம்..?
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அடுத்த பயனூர் கிராமத்தில் துணைமின் நிலையம் அமைக்க 1.66 ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டுள்ளதாகவும் விரைவில் பணிகள் துவங்கும் என்றும் அமைச்சர் தங்கமணி கூறினார்.
திருவாலங்காடு சர்க்கரை ஆலைப் பகுதியில் துணைமின் நிலையம் அமைக்கப்படும் என்று கூறி 2 ஆண்டுகள் ஆகியும் இதுவரை அமைக்கப்படாதது ஏன் என திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி. ராஜேந்திரன், சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார்.
அந்த இடத்தில் குத்தகைத் தொகை அதிகமாக இருந்ததால் மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கமணி பதிலளித்தார்.
கடம்பத்தூர் ஒன்றியத்தில் கொள்ளக்காலணியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட குடிசைகளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என்ற எம்.எல்.ஏ ராஜேந்திரனின் கோரிக்கைக்கு பதிலளித்த அமைச்சர், முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கொரானா வைரஸ் குறித்து எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் கேள்வி
கொரானா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இன்று முதல் சட்டப்பேரவையில் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கொரானா வைரஸ் தொடர்பாக எதிர்க்கட்சி துணைதலைவர் துரைமுருகன் கேள்வியெழுப்பினார்.
இதனை தொடர்ந்து பேசிய சபாநாயகர் தனபால், கொரானா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரவை நிகழ்வுகளை காண வரும் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக அறிவித்தார். இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை பேரவை நிகழ்வுகளை காண அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கொரானா தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்
கொரானா தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த துரைமுருகன், ஒடிசா போன்ற மாநிலங்களில் சட்டப்பேரவை நிகழ்ச்சிகளும், ஆந்திராவில் உள்ளாட்சித் தேர்தலும் ஒத்திவைக்கப்பட்டதை சுட்டிக்காட்டினார்.
கொரானா தொடர்பாக யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர், உலக சுகாதார நிறுவனம் மற்றும் மத்திய அரசு அறிவுறுத்தல் படி தமிழகத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
கொரானா பாதித்த ஒரு நபரும் குணமடைந்து விட்டதாகவும், வேறு யாருக்கும் வைரஸ் பாதிப்பு இல்லை என்றும் அவர் கூறினார். பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்தால் இதேநிலை தொடரும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் குறிப்பிட்டார்.
Comments