ம.பி.,யில் நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து சபாநாயகர் இன்று முடிவு

0 2463

மத்தியப் பிரதேசத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்த தமது முடிவை இன்று அறிவிப்பதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். கமல்நாத் அரசு கவிழ்ந்தால் புதிய அரசு அமைக்க பாஜக தயாராகி வருகிறது.

மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. ஜோதிர் ஆதித்ய சிந்தியா ஆதரவாளர்களான 6 அமைச்சர்கள் உள்பட 22 அதிருப்தி எம்.எல்ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகினர். இதனால் கமல்நாத் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

6 அமைச்சர்கள் ராஜினாமாவை ஏற்றுக் கொண்ட ஆளுநர் லால்ஜி டாண்டன், நம்பிக்கை வாக்கெடுப்பு கோருமாறு கமல்நாத்திற்கு உத்தரவிட்டார்.

இந்நிலையில் தமது கட்சி எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை நடத்திய முதல் அமைச்சர் கமல்நாத் நள்ளிரவில் ஆளுநரை சந்தித்தார். இச்சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கமல்நாத் அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை பாஜகவினர் பெங்களூரில் சிறைவைத்துள்ள நிலையில் எப்படி பெரும்பான்மையை நிரூபிக்க இயலும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். எம்.எல்,ஏக்கள் சுதந்திரமாக வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்று ஆளுநரிடம் கோரியதாக தெரிவித்த கமல்நாத் அரசியல் சாசனத்தை மதிப்பளிக்குமாறும் ஆளுநருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனிடையே டெல்லி அடுத்த குருகிராமில் ஐடிசி கிராண்ட் பாரத் என்ற சொகுசு ஓட்டலில் தங்க வைக்கப்பட்டிருந்த மத்தியப் பிரதேச பாஜக எம்.எல்.ஏக்கள் போபாலுக்கு செல்ல டெல்லி விமான நிலையத்திற்கு சொகுசுப் பேருந்துகள் மூலம் அழைத்து வரப்பட்டிருந்தனர். விமான நிலையத்தில் அரசியல் நிலவரம் குறித்து எம்.எல்.ஏக்கள் விவாதித்தனர்.

இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிட்டபோதும், இதுகுறித்த தமது முடிவை இன்று அறிவிப்பதாக சபாநாயகர் பிரஜாபதி தெரிவித்துள்ளார். பெரும்பான்மையை நிரூபிக்க சபாநாயகர் இன்று அனுமதியளிப்பாரா அல்லது கமல்நாத் அரசுக்கு அவகாசம் அளிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதனிடையே கமல்நாத் அரசு கவிழ்ந்தால் பாஜக தலைமையில் புதிய அரசு அமைப்பதற்கு, சிவராஜ் சிங் சவுகான், அமித் ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்களுடன் ஜோதிராதித்யா சிந்தியா ஆலோசனை நடத்தி வருகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments