ம.பி.யில் கமல்நாத் அரசு தப்புமா..? புதிய அரசு அமையுமா..? பரபரப்பான அரசியல் சூழல்

0 2828

மத்தியப் பிரதேசத்தில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், டெல்லியிலும் குருகிராமிலும் பாஜக தலைவர்கள் ஆலோசனை நடத்தியுள்ளனர். போபாலில் சட்டமன்றம் அமைந்துள்ள பகுதியில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேசச் சட்டப்பேரவையில் திங்களன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளதால் ஜெய்ப்பூரில் இருந்து காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் விமானத்தில் போபால் வந்து சேர்ந்தனர்.

அவர்கள் தங்கியுள்ள மாரட் விடுதியைச் சுற்றிலும் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். மார்ச் 16 முதல் ஏப்ரல் 13 வரை போபாலில் சட்டமன்றம் அமைந்துள்ள பகுதியில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே டெல்லியில் மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமரின் வீட்டில் மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோர் ஆலோசனை நடத்தினர். அதன்பின் சொலிசிட்டர் ஜெனரல் துசார் மேத்தாவைச் சந்தித்துப் பேசினர்.

குருகிராமில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கியுள்ள விடுதிக்கும் சென்றனர். நம்பிக்கை வாக்கெடுப்பின்போது பின்பற்ற வேண்டிய உத்திகள் பற்றி அவர்கள் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

அமைச்சர்கள் 6 பேரின் பதவி விலகலை ஆளுநர் ஏற்றதால் சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதனால் மத்தியப் பிரதேசச் சட்டப்பேரவையின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 222 ஆகக் குறைந்துள்ளது.

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெறுவதற்கு 112 உறுப்பினர்களின் ஆதரவு வேண்டும். சிந்தியாவின் ஆதரவாளர்கள் 22 பேர் விலகியதால் காங்கிரசின் பலம் 92ஆகக் குறைந்துள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர்கள் இருவர், சமாஜ்வாதி உறுப்பினர் ஒருவர், சுயேச்சைகள் 4 பேர் காங்கிரசுக்கு ஆதரவளிக்கின்றனர். இவர்களைச் சேர்த்தாலும் காங்கிரசின் பலம் 99 ஆகும். அதேநேரத்தில் பாஜகவுக்கு 107 உறுப்பினர்கள் உள்ளனர்.

பெங்களூர் விடுதியில் உள்ள சிந்தியாவின் ஆதரவாளர்கள் 16 பேரும் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் இருந்தாலே கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்ந்துவிடும். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments