கொரோனா தாக்கம்…தடைபடும் உலக நிகழ்வுகள்
உலகம் முழுவதும் கொரோனா தன்னுடைய கொடூர தாண்டவத்தை நிகழ்த்தி வருகிறது. அதன் தாக்கத்திற்கு உலக நாடுகள் பலவும் பாதிக்கப்பட்டு இருப்பதால் நோயை கட்டுப்படுத்துவது, தடுக்கும் நடவடிக்கைகள், என மக்களை காப்பாற்ற பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்படாத நாடுகளும் துரிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்க்கொண்டு வருகின்றன.
எத்தனை தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தாலும் நோயின் வீரியம் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு அதிகமாக இருப்பதால் நோயை தடுப்பதில் சிரமம் ஏற்படுவதால் கலக்கத்தில் உள்ளன பாதிக்கப்பட்ட நாடுகள்.
மேலும் வைரஸ் தாக்கத்திலிருந்து மக்களை பாதுகாக்க அந்தந்த நாட்டு அரசுகளும் பல்வேறு கட்டுப்பாடுகளை பின்பற்ற மக்களுக்கு அறிவுருத்தி வருகின்றன. கொரோனா பாதிப்பிலிருந்து தங்களை காப்பாற்றிக்கொள்ள மக்களும் வெளியே வராமல் வீடுகளிலேயே அடங்கி கிடக்கின்றனர்.
அப்படி கொரோனாவின் தாக்கத்தால் உலகம் முழுவதும் இருக்கும் மக்களின் அன்றாட வாழ்வில் பல மாற்றங்கள் நடக்கின்றன. உணவு பழக்கம், பயணங்கள் என மக்களின் மிக முக்கியமான எல்லா நிகழ்வுகளிலும் மாற்றங்கள் நடந்து வருகின்றன.
கொரோனா வைரஸ் தாக்கியதிலிருந்து மக்கள் தொடர் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். அதில் முக்கியமானது சாப்பிடும் உணவு பழக்கம். ஒரு வெளவாலை சாப்பிட்டதால் தான் சீன மக்களுக்கு கொரோனா தாக்கியதாக உலகம் முழுவதும் நம்பப்படுவதால் மக்கள் சாப்பிடும் உணவுகளை தேர்ந்தெடுப்பதில் மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றனர்.
இன்றைய காலத்தில் நாம் சாப்பிடும் அனைத்து உணவுகளும் செயற்கை முறையில் தயாரிக்கப்படுவதால், கொரோனா தாக்கியதிலிருந்து மக்கள் தாங்கள் எதை சாப்பிட வேண்டும் என்பதிலும், ரசாயானம் கலந்த உணவுகளை சாப்பிடுவதால் வேறு ஏதேனும் நோய் தொற்றுகள் மூலம் பாதிக்கப்படுவோமோ என மக்கள் தொடர்ந்து அச்சத்தில் இருக்கின்றனர்.
அதுமட்டுமல்லாது மக்களின் பயணங்கள் பெரும் பாதிப்புகளுக்கு உண்டாகி உள்ளன கொரோனா தொற்று ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதாக பரவுவதாலும், மேலும் பாதிக்கப்பட்ட நபருக்கு கூட தெரியாமல் அவரிடம் தொடர்பில் இருப்பவர்களுக்கும் மிக எளிதாக பரவுவதால்
ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு மக்கள் பயணிப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன உலக நாடுகள். இதனால் வெளிநாடுகளுக்கு சென்று படிப்பவர்களும், அங்கு வேலை செய்பவர்களும் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
விமானங்கள் கப்பல்கள் என தொலைதூர பயணங்கள் மேற்கொள்ளும் அனைவரும் தங்கள் பயணத்தின் பாதி வழியிலேயே தடைபட்டு, அல்லது தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு போக முடியாமல் தவித்து வருகி்ன்றனர்.
மேலும் உலகில் நடக்கக்கூடிய முக்கியமான நிகழ்வுகள் அனைத்தும் ரத்து செய்யக்கூடிய அளவிற்கு கொரோனாவின் தாக்கம் உள்ளது. சமீபத்தில் நடக்ககூடிய ஒலிம்பிக், சர்வதேச கிரிக்கெட் போட்டிகள்
கால்பந்து போட்டிகள் என அனைத்து விளையாட்டு போட்டிகளும் குறிப்பிட்ட நேரத்தில் நடக்குமா என இன்றுவரை சந்தேகமாகவே உள்ளது. சமீபத்தில் பார்வையாளர்களே இல்லாமல் பல விளையாட்டு போட்டிகள் நடைபெற்றதே அதற்கு சாட்சிகளாக இருக்கின்றன.
அதுமட்டுமல்லாது அதிக எண்ணிக்கையிலான மக்கள் ஒரு இடத்தில் கூடுவதால் நோய் தொற்று பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால். குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்களுக்கு மேல் கூட்டமாக கூடுவதை தடுக்குமாறு அறிவுருத்தப்படுவதால் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகள் கூட நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
மேலும் பள்ளிகள், கல்லூரிகள் அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அலுவலகங்களில் வேலை செய்பவர்களும் வீட்டிலிருந்தபடியே வேலை செய்யவும் உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன.
இப்படி தொடர்ந்து தங்களுடைய அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமலும், சரியான உணவுகளை உட்கொள்ள முடியாமலும், கொரோனா வைரஸ் பற்றிய வதந்திகளும் அதிகமாக பரவுவதால் தங்களுக்கு நோய் தாக்குமா என மக்கள் தொடர்ந்து அச்சத்தில் இருப்பதாலும் உளவியல் ரீதியாகவும் பெரும் இன்னல்களை சந்திக்கின்றனர்.
இப்படி ஒட்டுமொத்த உலகையே தன்னுடைய பிடியில் வைத்து உலுக்கி வரும் கொரோனாவை உலகம் முழுவதும் கட்டுக்குள் கொண்டுவருவதை காண மக்கள் அனைவரும் எதிர்பார்ப்புகளோடு காத்திருக்கின்றனர்.
Comments