விபத்து - பிளாஸ்டிக் கழிவால் 347 வன உயிரினங்கள் பலி

0 1981

சென்னை ஐஐடி அமைந்துள்ள 6,200 ஏக்கர் வனப்பகுதியில் கடந்த 3 ஆண்டுகளில் 347 வன உயிரினங்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தத்தில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை நகரின் மையப்பகுதியான கிண்டியில் இயற்கை சூழலுடன் இதமான தட்பவெட்ப நிலையுடன் கூடிய வனப்பகுதி அமைந்துள்ளது. புள்ளி மான்கள், கலை மான்கள், புல்வாய் மான்கள் மற்றும் குரங்குகள், நரி, மரநாய் மற்றும் பாம்பு, ஆமைகள் போன்ற ஊர்வன, ஏராளமான பறவைகள் உள்ளிட்ட பல வகையான உயிரினங்கள் இந்த வனப்பகுதியை வாழ்விடமாகக் கொண்டுள்ளன.

இந்த நிலையில், பிளாஸ்டிக் குப்பை கழிவுகளை முறையாக கையாளாத நிலையில் அவற்றை உண்பதாலும், விபத்துகளாலும் வன உயிரினங்கள் உயிரிழந்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக இயற்கை ஆர்வலர் கிளமண்ட் ரூபின் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெற்ற தகவலில் கடந்த 2017 தொடங்கி நடப்பாண்டின் பிப்ரவரி மாதம் வரை 3 ஆண்டுகளில் 347 வன உயிரினங்கள் பலியாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் 265 புள்ளிமான்கள், 15 வெளிமான்கள் என்றும், 58 குரங்குகள், 3 நரி, 2 மரநாய், நல்ல பாம்பு, கீரிப்பிள்ளை போன்றவை உயிரிழந்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஐஐடி வளாகத்திற்கு வேகமாக செல்லும் வாகனங்களால் மான்கள் உட்பட 10 க்கும் மேற்பட்ட உயிரினங்கள் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாய உத்தரவுப்படி, மான்கள் அதிகம் நடமாடும் பகுதியில் அறிவிப்புப் பலகைகள் மற்றும் வேகத்தடுப்புகளை வனத்துறை அமைத்துள்ளது. என்றாலும் குப்பை கழிவுகளால் வனவிலங்குகள் உயிரிழப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இயற்கை ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments