இந்தியாவில் கொரானா பாதித்தோரின் எண்ணிக்கை 102 ஆக உயர்வு

0 11866

மகாராஷ்டிரா, கேரளா, தெலங்கானா மாநிலங்களில் புதிதாக 15 பேருக்கு கொரானா வைரஸ் உறுதி செய்யப்பட்டதையடுத்து, இந்தியாவில் கொரானா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 102-ஆக உயர்ந்துள்ளது.

 இந்தியா முழுவதும் தீவிர தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையிலும், கொரானா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் முதியவர் ஒருவரும், டெல்லியில் மூதாட்டி ஒருவரும் கொரானாவுக்கு பலியாகியுள்ளனர். இதையடுத்து நாடு முழுவதும் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த, கொரானாவை பேரிடராக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் மகாராஷ்டிரத்தில் நேற்று ஒரே நாளில் 12 பேருக்கு கொரானா வைரஸ் உறுதியாகியுள்ளது. ராஜஸ்தான், தெலுங்கானா, கேரளா மாநிலங்களில் தலா ஒருவருக்கு கொரானா நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரத்தில் புதிதாக பாதிக்கப்பட்டோரையும் சேர்த்து, அந்த மாநிலத்தில் கொரானா பாதித்தோரின் எண்ணிக்கை 31ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் கேரளாவில் கொரானா பாதித்தோரின் எண்ணிக்கை 22ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் கொரானா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 102ஆக உயர்ந்துள்ளது. 

 கொரானா பரவுவதை தடுக்க ஏற்கெனவே கேரளா உள்ளிட்ட 8 மாநிலங்களில் பள்ளிகள், திரையரங்குகள் உள்ளிட்டவற்றை இம்மாத கடைசி வரை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, பஞ்சாப், தெலுங்கானா, இமாசலப் பிரதேசம், கோவா ஆகிய மாநிலங்களிலும் பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் உள்ளிட்டவற்றை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. கோவாவுக்கு சுற்றுலா பயணிகள் வர வேண்டாம் என்று அந்த மாநில அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.டெல்லி ஜனக்புரியில் உயிரிழந்த மூதாட்டியின் 46 வயது மகனுடன் 813 பேர் தொடர்பிலிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களை தனிமைபடுத்தும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

கேரளாவில் கொரோனா பரவுவதைத் தடுக்க அனைத்து ரயில், விமான, பேருந்து நிலையங்களிலும் பயணிகளைக் கண்காணிக்கவும் பரிசோதிக்கவும் அந்த அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் தரைவழியாக வெளிநாடுகளில் இருந்து கொரானா பரவாமல் தடுக்க பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், பூடான், மியான்மர் ஆகிய 5 நாடுகளுடனான எல்லை வழியாக பயணிகள் போக்குவரத்து காலவரையின்றி தடை செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரானா பரவுவதை கட்டுப்படுத்த மேலும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியம் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தென்கொரியாவில் எடுக்கப்பட்ட தீவிர நடவடிக்கையை பின்பற்றலாம் என்றும் அவர்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் வழியாக பாகிஸ்தானின் கர்தார்பூரிலுள்ள குருத்வாராவுக்கு நடைபெற்று வரும் புனித யாத்திரை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கர்தார்பூர் யாத்திரையும், அதற்கான முன்பதிவும் நாளை முதல் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரானா வைரஸ் பரவி வருவதை கருத்தில் கொண்டு, ஆந்திரத்தில் இம்மாதம் 21ம் தேதி முதல் 4 கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டிருந்த உள்ளாட்சித் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆந்திர மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 6 வாரங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும், கொரானா கட்டுப்படுத்தப்பட்ட பின்னர், புதிய தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரானா வைரஸ் பரவி வருவதை சுட்டிக்காட்டி, மகாராஷ்டிர மாநிலம் சீரடியிலுள்ள சாய்பாபா கோயிலுக்கு  வருவதை ஒத்திவைக்கும்படி பக்தர்களை கோயில் நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரானா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளை அந்த மாநில அரசு விதித்துள்ளது. அந்த கட்டுப்பாடுகளில், அதிக எண்ணிக்கையில் மக்கள் திரள்வதை தவிர்க்க வேண்டும், மக்கள் கூடும் வழிபாட்டு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டாம் ஆகியவையும் அடங்கும்.

இதை சுட்டிக்காட்டியுள்ள சீரடி சாய்பாபா கோயில் அறக்கட்டளை தலைமை செயலதிகாரி அருண் டோங்க்ரே ((Arun Dongre)), சில நாள்களுக்கு பக்தர்கள் சீரடி வருவதை ஒத்தி வைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments