உலக நாடுகளை மிரட்டும் கொரானா..!

0 2741

கொரானா வைரஸ் பாதிப்பும் உயிரிழப்பும் அதிகரிப்பதை அடுத்து, நாடு தழுவிய நெருக்கடி நிலையை அமெரிக்கா அறிவித்ததுடன், 3 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் நிதியையும் ஒதுக்கியுள்ளது.

சர்வதேச அளவில் அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்து 500ஐ தாண்டி இருக்கிறது. ஒரு லட்சத்து 48 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் West Virginia தவிர மற்ற 49 மாநிலங்களிலும் கொரானா வைரஸ் நுழைந்துள்ளது. அங்கு 2 ஆயிரத்து 204 பேருக்கு கொரானா தொற்றியுள்ளதோடு, இதுவரை 49 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், நிலைமையின் தீவிரத்தை உணர்த்தும் வகையில், கொரானா வைரஸ் பரவல் தொடர்பாக நாடு தழுவிய நெருக்கடி நிலையை அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

இதன் மூலம், கொரானா சவாலை எதிர்கொள்ள அமெரிக்க மாநிலங்களுக்கு 50 பில்லியன் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 3 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நிதியாதாரம் கிடைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பாவில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக இத்தாலி நீடிக்கிறது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில், கொரானாவுக்கு 250 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை ஆயிரத்து 266 ஆக உயர்ந்துள்ளது. இத்தாலியில் மொத்தம் 17 ஆயிரம் பேருக்கு கொரானா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இத்தாலியை தொடர்ந்து ஸ்பெயினில் 4 ஆயிரத்து 209 பேருக்கு கொரானா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 120 பேர் உயிரிழந்ததை அடுத்து ஸ்பெயின் அரசு நெருக்கடி நிலையை அறிவித்துள்ளது.

இதனிடையே டோக்கியோவில் திட்டமிட்டபடி ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் என்று ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உறுதியளித்துள்ளார். ஜப்பானில் 700க்கும் அதிகமானோர் கொரானாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது இந்த அறிவிப்பு ஒலிம்பிக் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments