கொரானா பரவல்: பேரிடராக அறிவிப்பு..!
கொரானா வைரஸ் பரவுவதை பேரிடராக (notified disaster) அறிவித்துள்ள மத்திய அரசு, கொரானாவால் உயிரிழப்போருக்கு 4 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
சவூதி அரேபியாவில் இருந்து திரும்பிய கர்நாடக மாநிலம் கலபுர்கியை சேர்ந்த 76 வயது முதியவர் ஒருவர், ஹைதராபாத்தில் கடந்த 10ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து டெல்லியின் மேற்கு பகுதியில் நேற்று 68 வயதான மூதாட்டி ஒருவர் கொரானாவுக்கு பலியாகியுள்ளார்.
சுவிட்சர்லாந்து, இத்தாலி நாடுகளுக்கு சென்றுவிட்டு கடந்த மாதம் 23ம் தேதி திரும்பிய அவருடைய மகனுக்கு கொரானா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரது தாயாரான 68 வயது மூதாட்டிக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், அவருக்கும் கொரானா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று மூதாட்டி இறந்தார். மூதாட்டியின் உயிரிழப்பை அடுத்து, இந்தியாவில் கொரானாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 2ஆக உயர்ந்துள்ளது.
இதுதவிர்த்து நாடு முழுவதும் இதுவரை 83 பேர் கொரானாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தனது இணையதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. அதில் இந்தியர்கள் 66 பேர் என்றும், வெளிநாட்டினர் 17 பேர் என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
அதேநேரத்தில் கொரானா வைரசை கட்டுப்படுத்த மத்திய அரசு எடுத்த தீவிர நடவடிக்கையால் உத்தரப் பிரதேச மாநிலத்தில் 5 பேரும், ராஜஸ்தான் மற்றும் டெல்லியை சேர்ந்த தலா ஒருவரும் குணமடைந்துள்ளனர். கேரள மாநிலத்தில் கடந்த மாதம் 3 பேர் குணமடைந்த நிலையில், அவர்களுடன் சேர்த்து நாடு முழுவதும் கொரானாவில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் கொரானா பரவுவதை பேரிடராக (notified disaster) கருதி செயல்பட முடிவு செய்திருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாநில பேரிடர் மீட்பு நிதியிலிருந்து (state disaster response fund) உதவித் தொகை அளிக்கும் வகையில், கொரானா நிலவரத்தை பேரிடராக (notified disaster) கருதி செயல்பட அரசு முடிவு செய்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.
கொரானா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு 4 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் எனவும் அறிவிப்பில் மத்திய உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
ராஜஸ்தானில் கொரானா வைரஸ் நிலவரத்தை கருத்தில் கொண்டு, பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகளை இம்மாதம் 30ம் தேதி வரை மூடுவதற்கு அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
அந்த மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், உயரதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனைக்கு பிறகு வெளியிடப்பட்ட அறிவிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் மருத்துவ மற்றும் செவிலியர் கல்லூரிகளுக்கு இந்த உத்தரவு பொருந்தாது எனவும் ராஜஸ்தான் அரசு குறிப்பிட்டுள்ளது. அதிக அளவு கூட்டமில்லாமல் எளிமையாக திருமண நிகழ்ச்சிகளை நடத்தும்படியும் ராஜஸ்தான் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
கொரானா பரவல் தடுப்பு நடவடிக்கைகளின் ஒருபகுதியாக ஒருவாரக் காலத்துக்கு அவசர வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என மும்பை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மும்பை உயர்நீதிமன்றப் பதிவாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மும்பை உயர்நீதிமன்றம், நாக்பூர், அவுரங்காபாத், கோவா ஆகிய இடங்களில் உள்ள அமர்வுகள் மார்ச் 16ஆம்தேதி முதல் ஒருவாரக் காலத்துக்கு அவசர வழக்குகளை மட்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் எனக் குறிப்பிட்டுள்ளது.
Comments