விலை சரியும் நேரத்தில் பெட்ரோல், டீசல் கலால் வரி உயர்வு!
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள கச்சா எண்ணெய் விலை சரிவின் பயன்கள் நுகர்வோருக்கு கிடைக்காது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெட்ரோல் மீதான சிறப்பு கலால் வரி 2 ரூபாய் அளவுக்கு உயர்த்தப்பட்டு, 8 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சாலை மேல் வரி 1 ரூபாய் உயர்த்தப்பட்டு 10 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, டீசல் மீதான சிறப்பு கலால் வரி 2 ரூபாய் அளவுக்கு உயர்த்தப்பட்டு 4 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. டீசல் மீதான சாலை மேல்வரி 1 ரூபாய் அளவுக்கு உயர்த்தப்பட்டு 10 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி தலா 3 ரூபாய் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. வழக்கமாக, கலால் வரி உயர்வு பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பிற்கு வழிவகுக்கும்.
ஆனால், கொரானா பாதிப்புகளின் எதிரொலியாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் சரிவை சந்தித்துள்ள நிலையில், கலால் வரி உயர்த்தப்பட்டுள்ளது. எனவே பெட்ரோல், டீசல் விலை உயராது.
அதேசமயம், வாடிக்கையாளர்களுக்கு கிடைக்க வேண்டிய கச்சா எண்ணெய் விலை சரிவின் பயன்களை, வரிகளின் வடிவில் மத்திய அரசு எடுத்துக் கொள்கிறது.
2014ஆம் ஆண்டில் பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தபோது, பெட்ரோல் மீதான கலால் வரி 9 ரூபாய் 48 காசுகளாகவும், டீசல் மீது 3 ரூபாய் 56 காசுகளாகவும் இருந்தது.
புதிய வரி உயர்வின் மூலம், பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 22 ரூபாய் 98 காசுகளாகவும், டீசலுக்கு 18 ரூபாய் 83 காசுகளாகவும் உயர்ந்துள்ளது.
தற்போது கலால் வரி மேலும் உயர்த்தப்பட்டிருப்பதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு 39 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும் என அதிகார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நடப்பு நிதியாண்டில் மீதமுள்ள 3 வாரங்களில் 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் குறைவான தொகை கிடைக்கும் எனவும் சில புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
Comments