கொரானா வைரசை கட்டுப்படுத்த சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு
கொரானா வைரசை கட்டுப்படுத்த உறுதியான திட்டத்தை வகுக்க முன்வரும்படி சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
நாடு முழுவதும் இதுவரை 75 பேருக்கு கொரானா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் இந்தியர்கள் 58 பேர் என்றும், வெளிநாட்டினர் 17 பேர் என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் தனது இணையதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் கொரானாவால் பாதிக்கப்பட்ட 3 பேர் குணமடைந்து விட்டதாக கூறியுள்ள சுகாதார அமைச்சகம், ஹைதராபாத்தில் ஒருவர் பலியாகியுள்ளதாகவும் கூறியுள்ளது.
கர்நாடகத்தில் சினிமா திரையரங்குகள், வணிக வளாகங்கள், கேளிக்கை விடுதிகள் ஆகியவற்றை ஒரு வாரத்துக்கு மூட உத்தரவிட்டுள்ள மாநில அரசு, பொதுமக்கள் அதிகம் வரும் நிகழ்ச்சிகள், திருமண நிகழ்ச்சிக்கு ஒருவாரம் தடை விதிப்பதாகவும் அறிவித்துள்ளது.
பீகார் மாநிலத்தில் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிலையங்களை 31ம் தேதி வரை மூட நிதிஷ்குமார் அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவுக்கு பதிலாக அவர்களது வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும் என தெரிவித்துள்ளது.
ஹரியானா மாநிலத்தில் பல்கலைகழகங்கள், கல்லூரிகள் 31ம் தேதி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள், கீழ் திருப்பதியில் மருத்துவ ஊழியர்களால் தீவிர பரிசோதனைக்கு பிறகே கோயிலுக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கொரானா வைரஸை கட்டுப்படுத்த உறுதியான திட்டத்தை வகுக்க சார்க் நாடுகளின் தலைவர்கள் முன்வர வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் அவர் வெளியிட்ட பதிவில், சார்க் நாடுகளிலுள்ள மக்களை நல்ல ஆரோக்கியத்துடன் வைத்திருப்பதற்கான வழிகளை உருவாக்குவது குறித்து வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தலாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.
உலக மக்கள் தொகையில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் மக்கள் வாழும் இடமாக திகழும் தெற்காசியா, மக்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்யாமல் பின்வாங்கக் கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பிரதமரின் இந்த அழைப்பை நேபாள பிரதமர் ஒலி, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச, மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகமது சோலி, பூடான் பிரதமர் உள்ளிட்டோர் வரவேற்றுள்ளனர்.
Comments