அமல்படுத்தப்படுகிறதா 1897 ஆம் ஆண்டு தொற்றுநோய் தடுப்புச்சட்டம்
உலகம் முழுவதும் கொரோனா எனும் கொடூரன் பரவி தன்னுடைய கொடூரக் கரங்கள் மூலம் ஆயிரக்கணக்கான மக்களை காவு வாங்கி வருகிறது. இதனால் உலக நாடுகள் பலவும் பெரும் நெருக்கடிகளை சந்திந்து வருகின்றன. குறிப்பாக பொருளாதார ரீதியாகவும், சுகாதார ரீதியாகவும் பலத்த இழப்புகளையும் சந்தித்து வருகின்றன. இப்படி இக்கட்டான சூழல்களுக்கு மத்தியிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் அங்கு இருக்கும் மக்களை காப்பாற்ற பல வழிமுறைகளை மேற்கொண்டு வருகின்றன.
சில வழிமுறைகள் மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தினாலும் அவற்றையும் செயல்படுத்தி மக்களை காப்பாற்றுவதில் முனைப்பு காட்டிவருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் இந்தியாவில் பரவிய கொரோனா வைரஸை தடுக்க அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் 1897 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் கொண்டுவரப்பட்ட தொற்றுநோய் தடுப்பு சட்டத்தை அமல்படுத்தலாமா என இந்தியா ஆலோசனை மேற்கொண்டு வருகின்றது. இந்த சட்டம் இயற்றுவது ஒருவகை தடுப்பு நடவடிக்கை என்றாலும் இந்த சட்டத்தின் கடந்தகால வரலாறு மக்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
சுதந்திரத்திற்கு முன்பான இந்தியாவில் 1890 களில் இன்று மும்பை என்று அழைக்கப்படும், அன்றைய பம்பாய் பிரெசிடென்சி பகுதியில் ஒரு கொடுரமான நோய் தொற்று பரவி மக்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வந்தனர். மருத்துவ ரீதியாக முன்னேற்றம் அடையாத அந்த காலத்தில் அந்த நோயை கண்டுபிடிப்பதில் சற்று தாமதம் ஏற்பட்டது. இறுதியாக நீண்ட இடைவெளிக்கு பிறகு மக்களை காவு வாங்கியது பிளேக் நோய் என கண்டறியப்பட்டது. இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தனர்
இறப்பு எண்ணிக்கை யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் இருந்ததால், இதுபோன்று நோய் தொற்றுகள் ஏற்ப்பட்டு அதிகமாக பரவுவதை தடுத்து மக்களை பாதுகாப்பதற்காக. தங்களுக்கிருந்த அதிகாரத்தை பயன்படுத்தி 1897 ஆம் ஆண்டு தொற்றுநோய் தடுப்பு சட்டத்தை கொண்டு வந்தது ஆங்கில அரசு.
நோயால் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றுவதே இந்த சட்டத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது. ஆனால் அதிகாரத்தில் இருந்த ஆங்கிலேயர்கள் இந்த சட்டத்தை தவறாக பயன்படுத்தினர். மேலும் இந்த சட்டத்தை கொண்டு தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி, அவர்களின் வீடுகள் மற்றும் உடமைகளையும் பறித்து அவர்களை பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்தியது அன்றைய ஆங்கிலேய அரசு.
மேலும் இந்த சட்டத்தை மீறுபவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தது. இப்படி காப்பாற்ற உருவாக்கிய சட்டம் மூலம் மக்களை பாதிப்புகளுக்கு ஆளாக்கியதால் இந்த சட்டத்தை அனைவரும் எதிர்த்தனர்.
பிறகு சுதந்திரத்திற்கு பிறகான இந்தியாவில் இந்த சட்டத்தில் மாற்றங்களை கொண்டு வந்தனர். மேலும் பழைய சட்டத்தில் இருந்த தவறுகளை திருத்தி புதிதாக இயற்றினர். அதன்படி தொற்றுநோயால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளை பொருத்து அந்தந்த மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காலாம்.
மேலும் மாநிலத்தில் ஒரு பகுதியில் நோய் பாதிப்பு கண்டறியப்பட்டால் துரிதமாக நடவடிக்கைகளை எடுத்தல், நோய் காரணிகளை கண்டறிந்து தடுப்பது, மக்களிடம் தொற்று பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல், மேலும் பாதிக்கப்பட்ட மக்களை தனிமைப்படுத்தி அவர்களுக்கு தேவையான இருப்பிடங்களை உருவாக்குதல்
குறிப்பாக நோய் தீவிரம் காரணாமாக பாதிக்கப்பட்டவர்களின் உடைமைகள் அழிக்கப்பட்டால் அவர்களுக்கு நிவாராணம் வழங்குவது என பல திருத்தங்களை கொண்டு வந்தது இந்திய அரசு.
தொற்றுநோய் தடுப்பு சட்டத்தை திருத்திய பிறகும் மக்களுக்கு இது குறித்து சரியான விழிப்புணர்வு இல்லாததால் பழைய சட்டம் போலவே மக்களை பாதிக்கும் என நினைத்து அச்சப்படுகிறார்கள். இதற்கு காரணம் சட்டத்தை திருத்தி பல ஆண்டுகள் ஆனாலும், அதற்கு பிறகும் இந்தியாவில் பல நோய்தொற்றுகள் ஏற்பட்டாலும் இந்தியா முழுமைக்கும் இந்த சட்டம் நடைமுறைப்படுத்தியது இல்லை.
2008 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் பன்றிக்காய்ச்சல் பரவி பாதிப்புகளை ஏற்படுத்திய போது அந்த மாநில அரசு மட்டும் இந்த சட்டத்தை அமல்படுத்தி தடுப்பு நடவடிக்கைளை எடுத்தது.
அதற்கடுத்து 2015 ல் சண்டிகரில் மலேரியா மற்றும் டெங்கு பாதிப்பு அதிகமாக இருந்ததால் அங்கு சட்டம் இயற்றப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி, சட்டத்தை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இதேபோல 2018 ல் குஜாராத்தில் உள்ள வதோதரா மாவட்டத்தில் இருக்கும் வாகோடியா கிராமத்தில் காலரா நோய் அதிகமாக பரவி இருந்ததால் அந்த கிராமத்தில் மட்டும் சட்டம் இயற்ற மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.
இப்படி எத்தனையோ பாதிப்புகள் ஏற்பட்டு இருந்தும் நாடு முழுவதும் ஒரு முறை கூட இந்த சட்டத்தை அமல்படுத்தியது இல்லை. சமீபகாலங்களில் கொரோனா வைரஸ் உலகின் பெரும்பாலான நாடுகளில் பரவி ஆயிரக்கணக்கான மக்கள் இறந்து உள்ளனர். மேலும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டும் உள்ளனர்.
இதனால் எல்லா நாடுகளும் தடுப்பு வேலைகளை முடுக்கி விட்டுள்ள நிலையில் இந்தியாவில் தொற்றுநோய் தடுப்பு சட்டத்தை அமல்படுத்த இந்திய அரசு முடிவெடுக்கும் என கூறப்படுகிறது. ஒருவேலை இந்த சட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கும், கொரோனா அச்சத்தில் உள்ள மக்களுக்கும் தீர்வு கிடைத்து நன்மை ஏற்படுமா எதிர்பார்க்கப்படுகிறது.
Comments