விஜய் வீட்டில் மீண்டும் விசாரணை... பிகில் வருவாய் தொடர்பாக நடவடிக்கை
நடிகர் விஜய் வீட்டில், சீலிடப்பட்ட லாக்கரில் இருந்து ஆவணங்களை கைப்பற்றி, பிகில் வருவாய் தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் மீண்டும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பிகில் படத்தின் வருவாயை மறைத்து வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரில் கடந்த மாதம் ஏஜிஎஸ் நிறுவனம், பைனான்சியர் அன்புச் செழியன், நடிகர் விஜய் ஆகியோர் இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
அப்போது நடிகர் விஜய் வீடு மற்றும் அலுவலகத்தில் இருந்து, மாஸ்டர் படம் தொடர்பாக பணப்பரிவர்த்தனை நடந்ததற்கான ஆவணங்களை பறிமுதல் செய்திருந்தனர்.
இந்நிலையில் சென்னையை அடுத்த பனையூரில் நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தி வருகின்றனர். 8-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த மாதம் நடைபெற்ற வருமான வரி சோதனையின்போது நடிகர் விஜய் வீட்டில் சில ஆவணங்களை சீல் வைத்து, அவற்றை வெளியே எடுக்க தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
அந்த தடை உத்தரவை நீக்கி, ஆவணங்களை எடுத்து விசாரணை மேற்கொண்டு வருவதாக வருமான வரித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்னர், மாஸ்டர் பட இணை தயாரிப்பாளர் லலித் குமார் வீட்டில் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையிலும், பணப் பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள் அடிப்படையிலும் விஜய் வீட்டில் உள்ள அலுவலர்கள் மற்றும் நிர்வாகியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
வரும் ஞாயிறு அன்று நடைபெறவுள்ள மாஸ்டர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் பேச்சுக்கு கடிவாளம் போட தான் இந்த விசாரணை என அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் சர்ச்சையை கிளப்பி வருகின்றனர்.
ஆனால், வருமானவரித்துறை சோதனையின்போது, பறிமுதல் செய்யப்படாத ஆவணங்கள் சீலிட்டு வைக்கப்படும் எனவும், பின்னர் விசாரணைக்காக சீல் அகற்றி, அந்த ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தப்படுவது வழக்கமான ஒன்றுதான் வருமான வரித்துறையினர் விளக்கமளித்துள்ளனர்.
Comments