கொரானா - உலகளாவிய நோய்த்தொற்று என உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு

0 2106

கொரானாவை உலகளாவிய நோய்த்தொற்று என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. கொரானாவுக்கு எதிராக அவசர மற்றும் தீவிர நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து நாடுகளும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரானா வைரஸ் உலகம் முழுவதும் 114 நாடுகளுக்கு பரவியுள்ளது. இதில், 50 நாடுகளில் கொரானா பாதித்தவர்களின் எண்ணிக்கை 10-க்கும் குறைவாகும். 81 நாடுகளில் இதுவரை கொரானா பரவவில்லை.

எண்ணிக்கை அடிப்படையில், உலகம் முழுவதும் 1 லட்சத்து 18 ஆயிரத்து 381 பேர் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரானாவுக்கு இதுவரை 4 ஆயிரத்து 292 பேர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில், வைரஸ் பரவும் வேகமும் தீவிரமும், அதற்கு எதிராக போதிய நடவடிக்கைகள் இல்லாமல் இருப்பதும் கவலைக்குள்ளாக்குவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதையடுத்து கொரானாவை உலகளாவிய நோய்த்தொற்று என உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டெட்ரோல் அதானோம் (Tedros Adhanom) அறிவித்துள்ளார்.

புதிய தொற்றுநோயின் உலகளாவிய பரவலை குறிக்கும் வகையில் இந்த அறிவிப்பை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது. கொரானா வைரஸ் பரவல், உலகளாவிய பொது சுகாதார நெருக்கடி என கடந்த ஜனவரி 30ஆம் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், அதன் தீவிரம் அதிகரித்துள்ளதால் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதையடுத்து, கொரானாவுக்கு எதிராக அவசர மற்றும் தீவிர நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து நாடுகளும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டெட்ரோல் அதானோம் கூறியுள்ளார். சீனா மற்றும் தென்கொரியாவில் கொரானாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருவதை சுட்டிக்காட்டியுள்ள அதானோம், வைரஸ் பரவல் இன்னும் கட்டுப்படுத்தக்கூடிய நிலையில்தான் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னர், 2009ஆம் ஆண்டில், பன்றிக் காய்ச்சல் என குறிப்பிடப்பட்ட H1N1 வைரஸ் பரவலை உலகளாவிய நோய்த்தொற்று என உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.

அப்போது உலக மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கு அளவுக்கு H1N1 பாதிப்பு இருந்தது. இருப்பினும்கூட அப்போது வெளியிடப்பட்ட அறிவிப்பு, தேவையற்ற பீதியை கிளப்பியதாக விமர்சனங்கள் எழுந்தன. சார்ஸ் அல்லது மெர்ஸ் காய்ச்சலை ஏற்படுத்திய வைரஸ் உலகளாவிய நோய் தொற்று என அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கொரானா உலகளாவிய நேய்த் தொற்று என்ற உலக சுகாதார நிறுவனத்தின் அறிவிப்பு, ஐரோப்பாவிற்கு அமெரிக்கா விதித்த பயணத் தடை ஆகியவற்றின் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது.

ரஷ்யாவுடனான போட்டி காரணமாக, கச்சா எண்ணெய் உற்பத்தியை மேலும் அதிகரிக்கப் போவதாக, சவூதி அரேபியா கூறியிருப்பதும் விலை வீழ்ச்சிக்கு வழிவகுத்துள்ளது. பிரென்ட் ரக கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 1.91 டாலர்கள் அளவுக்கு குறைந்து 33.88 டாலர்களுக்கு விற்பனையானது.

இதேபோல அமெரிக்க கச்சா எண்ணெய் 1.74 டாலகர்கள் அளவுக்கு குறைந்து 31.24 டாலர்களுக்கு விற்பனையானது. கடந்த ஜனவரியில் கச்சா எண்ணெய் விலை தொட்ட உச்சங்களோடு ஒப்பிடும்போது, 50 சதவீதம் அளவுக்கு விலை சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments