கொரோனாவால் தப்பியோடிய 100க்கும் மேற்பட்ட கைதிகள்
கொரோனா தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் இத்தாலி மற்றும் ஈரானில் அதிகப்படியான உயிரிழப்புகள் ஏற்பட்ட நிலையில் சீனாவில் பலியானோர் எண்ணிக்கை முற்றிலும் குறைந்துள்ளது.
கொரோனா பாதிப்பால் உலகம் முழுவதும் 4 ஆயிரத்து 600க்கும் மேற்பட்டவர்கள் மரணித்துள்ள நிலையில் இத்தாலியில் இதன் பாதிப்பு அதிகமாகக் காணப்பட்டது. இதுவரை அங்கு 827 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று ஒரே நாளில் மட்டும் 196 பேர் விஷக்கிருமிக்கு பலியாகி உள்ளது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஈரானில் நேற்று மட்டும் 63 பேர் பலியாகி உள்ளனர்.
ஆனால் கொரோனாவின் பிறப்பிடமாகக் கருதப்படும் சீனாவில் நேற்று உயிரிழப்புகள் ஏதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இத்தாலியில் கொரோனா பரவலைத் தடுக்க பொதுமக்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
மேலும் சிறைகளில் உள்ள கைதிகளை அவர்களது உறவினர்கள் பார்க்க தடை விதிக்கப்பட்டிருப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனை கண்டித்து நாடு முழுவதிலும் உள்ள சிறைகளில் கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதே போல் கைதிகளின் உறவினர்கள் சிறைகளுக்கு வெளியே திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சூழலை பயன்படுத்தி சிறைகளில் கைதிகள் கலவரத்தில் ஈடுபட்டு தப்பிக்க முயற்சிக்கின்றனர்.
நேற்று முன்தினம் நாடு முழுவதிலும் உள்ள சிறைகளில் நடந்த கலவரத்தில் 12 கைதிகள் பலியான நிலையில் 40 காவலர்கள் படுகாயமடைந்தனர். மேலும் 100க்கும் அதிகமான கைதிகள் தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து தப்பிச் சென்ற கைதிகளைப் பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் அந்நாட்டின் தென்கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள ஃபோகியாவில் உள்ள சிறையில் இருந்து தப்பிச் சென்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
தப்பிச் சென்ற கைதிகள் மக்களோடு மக்களாகக் கலந்து கொரோனா பீதியில் முகக்கவசம் அணிந்து காணப்படுவதால் அவர்களைக் கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தப்பிச் சென்ற கைதிகளில் 11 பேர் பிடிபட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Comments