2036 வரை ரஷ்ய அதிபராக தொடருவாரா புதின் ??

0 5860

ஒரு உளவு அமைப்பின் சாதாரண உளவாளியாக இருந்து, குறுகிய காலத்தில் ஒரு மாபெரும் சக்திவாய்ந்த நாட்டின் அதிபராக ஆகி உலக நாடுகளை தன் பக்கம் பார்க்க வைத்தவர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்.

தனது அதிரடியான நடவடிக்கைகளின் மூலம் எப்போதும் சர்ச்சைகளை தன்னிடம் வைத்திருப்பார். அன்றைய ஒருங்கிணைந்த ரஷ்யாவில் பிரபலமாக இருந்த கேஜிபி எனும் உளவு அமைப்பில் 1975 ஆம் ஆண்டு உளவாளியாக சேர்ந்து தன்னுடைய வாழ்கையை ஆரம்பித்தார் விளாடிமிர் புதின்.

சாதாரண உளாவளியில் இருந்து நாட்டின் அதிபர் பதவியை அடைந்தது வரை எண்ணற்ற சவால்களை எதிர்கொண்டு தன்னுடைய அதீத புத்தி கூர்மையின் மூலம் சில ஆண்டுகளிலேயே நாட்டின் அதிபர் ஆனார்.

1991ல் ஒருங்கிணைந்த ரஷ்யா உடைந்த பிறகு புடினுக்கு தொடர்ந்து அந்த உளவு அமைப்பில் நீடிக்க விருப்பமில்லை  மாறாக அரசியலில் பங்கேற்று செயல்பட விரும்பினார் புதின்.

அரசியலில் பிரவேசிக்க விரும்பிய புதினுக்கு அவர் படித்த பல்கலைகழகத்தில் பேராசிரியராக இருந்து மேயராக பதவியேற்ற ”அனடோலி சோப்சன்” என்பவர் உதவினார். இதன் மூலம் வெளியுறவு அமைச்சகத்தின் தலைவராக அவர் பதவியேற்றார். புதின் வகித்த அரசியல் ரீதியிலான முதல் பதவி இதுதான்.

image

சோவியத் யூனியன் உடைந்த பிறகு பல்வேறு சிக்கல்களில் இருந்த ரஷ்யாவிற்கு அன்று அதிபராக இருந்த போரிஸ் எல்ட்சனால் எந்த முன்னேற்றங்களையும் ஏற்படுத்த முடியவில்லை. அந்த காலகட்டத்தில் தான் எல்ட்சனின் அறிமுகம் புதினுக்கு கிடைத்தது. தன்னுடைய பேச்சுத்திறமையாலும், துரித செயல்பாடுகள் மூலமும் கேஜிபி யின் இன்னொரு அங்கமான ஃபெடெரல் செக்யூரிடி சர்வீஸ் அமைப்பின் தலைவராக உயர்ந்தார்.

அதிபர் எல்ட்சனின் செயல்பாடுகளில் மக்கள் தொடர்ந்து அதிருப்தியாக இருந்ததால் 1999 ஆம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்து முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் அனைத்து அதிகாரிகளின் ஒத்துழைப்போடும் மிகவும் துடிப்புடன் இருந்த விளாடிமிர் புதினை செயல் அதிபராக நியமித்தார் எல்ட்சன். இருந்தாலும் 2000 ஆம் ஆண்டு தான் அதிகாரப்பூர்வமாக அதிபரானார் விளாடிமிர் புதின்.

அன்று முதல் ரஷ்யாவின் அதிகாரமிக்க பதவிகளான அதிபர் மற்றும் பிரதமர் ஆகியவற்றில் தன்னை முன்னிறுத்திக் கொண்டே வருகிறார். தான் பதவியேற்ற நான்கே ஆண்டுகளில் தன்னுடைய அதிரடியான செயல்பாடுகள் மூலம் மக்களின் நம்பிக்கையை பெற்ற புதின் 2004 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக அதிபராக அரியணை ஏறினார். இப்படி தொடர்ந்து 8 ஆண்டுகள் அதிபராக இருந்த புதின் மூன்றாவது முறை அதிபர் தேர்தலில் போட்டியிட நினைத்த போது சிக்கல் ஏற்பட்டது.

அந்த நாட்டின் சட்ட விதிமுறைகளின் படி ஒருவர் அதிகபட்சம் இரண்டு முறை தான் அதிபராக பதவி வகிக்க முடியும். ஆனால் எப்படியாவது அதிகாரத்தில் இருக்க நினைத்த புதின், 2008 ல் நடந்த தேர்தலில் தனது நெருங்கிய நண்பரான மெத்வடேவை அதிபராக்கி, ரஷ்யாவின் பிரதமராக பொறுப்பேற்றார். பிரதமராக பதவியேற்ற காலத்தில் தான் நினைத்த எல்லாவற்றையும் நிறைவேற்றினார் புதின். அதில் முக்கியமாக நான்கு ஆண்டுகளாக இருந்த அதிபர் பதவியின் காலத்தை ஆறு ஆண்டுகளாக மாற்றினார்.

அதற்கடுத்து நடந்த 2018ல் நடந்த தேர்தலில் போட்டியிட்டு மூன்றாவது முறையாக அதிபரானார் விளாடிமிர் புதின். இப்படி தொடர்ந்து தன்னுடைய அதிரடியான அரசியல் நடவடிக்கைகள் மூலம் ரஷ்யா மட்டுமல்லாது பல்வேறு நாடுகளுக்கும் அவர் ஆச்சரியமான அதிபராகவே தெரிகிறார். ரஷ்யா முழுவதும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர நினைப்பதாக எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வந்தாலும் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் தன்னுடைய திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார் புதின்.

image

அந்த வகையில் 2024 வரை ஆட்சியில் இருக்கப்போகும் புதின் அடுத்து வரும் தேர்தலில் போட்டியிடுயிடுவதில் அந்நாட்டு சட்டத்தின் மூலம் சிக்கல் ஏற்படுவதை தடுக்க தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில் தான் ரஷ்யாவின் பாரளுமன்றத்தில் அதிபர் தேர்தலில் போடியிடுபவர்களுக்கான சட்டத்தை புதிப்பிக்க வேண்டும் என ஒரு மசோதாவை அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த சட்டத்தை புதிப்பிப்பதன் மூலம் தொடர்ந்து இரண்டு முறை அதிபராக இருந்த புதின். மீண்டும் இரண்டு முறை எந்தவித சிக்கலும் இல்லாமல் அதிபர் தேர்தலில் போட்டியிடலாம். இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டு அடுத்து அதிபர் தேர்தல்களில் போட்டியிட்டு புதின் வெற்றி பெற்றால் வரும் 2036 வரை அதாவது தன்னுடைய 83 வயது வரை எந்த எதிர்ப்பும் இல்லாமல் அதிபராக இருக்கலாம்.

இப்படி தன்னுடைய அதிகார பலத்தை தொடர்ந்து ரஷ்யாவில் நிலைநாட்ட நினைக்கும் விளாடிமிர் புதின் பல்வேறு சர்ச்சைகளுக்கும் உரியவராக இருக்கிறார்.

இத்தனையையும் மீறி புதின் தொடர்ந்து அதிபராக நீடிக்க முடியுமா என்ற பதிலை காலமும் மக்களும் தான் சொல்ல வேண்டும்.     

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments