ஹைட்ரோ கார்பன் திட்டம் தமிழகத்தில் செயல்பட வாய்ப்பே இல்லை - முதலமைச்சர் திட்டவட்டம்
விவசாயத்தை பாதிக்கும் எந்தவித புதிய ஹைட்ரோ கார்பன் திட்டங்களும் தமிழகத்தில் அனுமதிக்கப்பட மாட்டாது என்றும், ஹைட்ரோ கார்பன் திட்டம் இனி தமிழகத்தில் செயல்பட வாய்ப்பே இல்லை என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று சுற்றுச்சூழல் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின்போது இதுகுறித்து திமுக எம்எல்ஏ தா.மோ. அன்பரசன் கேளிவியெழுப்பினார். அதற்கு பதிலளித்த முதலமைச்சர், புதிய ஹைட்ரோ கார்பன் திட்டம் தமிழகத்தில் எப்போதும் துவங்கப்படாது என்றும், விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதிக்கும் அத்திட்டத்தை அமல்படுத்த தடை விதிக்கும் வகையில்தான் காவெரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்கும் சட்டம் பேரவையில் நிறைவேற்றப்பட்டது என்றும் பதிலளித்தார்.
தமிழகத்தில் பிளாஸ்டிக்குக்கு தடை விதிக்கப்பட்ட விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர், 14 வகையான பிளாஸ்டிக்குகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை முழுமையாக ஒழிப்பதற்கு மக்கள் மற்றும் வியாபாரிகளின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் குறிப்பிட்டார். விவசாய நிலங்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வருவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த முதலமைச்சர், அதைத் தடுக்க நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாகவும், சேதப்படுத்தப்படும் பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
வேளச்சேரி -பரங்கிமலை இடையேயான பறக்கும் ரயில் திட்டப் பணிகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர், நிலம் கையகப்படுத்துவதில் பல்வேறு சிரமம் இருப்பதாகவும், இருப்பினும் விரைவில் நிலம் கையகப்படுத்தப்பட்டு பணிகள் முடிக்கப்படும் என்று கூறினார்.
Comments