22 பேர் பதவி விலகல்... பெரும்பான்மை இழந்தது ம.பி. அரசு....
மத்தியப் பிரதேசத்தில் ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 22 பேர் பதவி விலகியுள்ளதால் காங்கிரஸ் அரசு பெரும்பான்மை இழந்துள்ளது.
2018 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தபோது, முதலமைச்சர் பதவி ஜோதிராதித்யாவுக்கு வழங்கப்படவில்லை. இதனால் அதிருப்தியில் இருந்த அவர் தனது பதவி விலகல் கடிதத்தை சோனியா காந்திக்கு நேற்று அனுப்பிவிட்டுப் பிரதமர் மோடியையும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்தித்துப் பேசினார்.
இதனால் அவர் விரைவில் பாஜகவில் இணைய உள்ளது உறுதியாகியுள்ளது. இந்த நிலையில் சிந்தியா ஆதரவு எம்எல்ஏக்கள் 22 பேர் பதவி விலகல் கடிதங்களை ஆளுநருக்கு அனுப்பியுள்ளனர். இந்த பதவி விலகல் கடிதங்கள் ஏற்கப்பட்டால் மத்திய பிரதேசத்தின் கமல் நாத் அரசு பெரும்பான்மையை இழக்கும்.
இதனால் ஆட்சியை தக்க வைக்கும் நடவடிக்கையாக போபாலில் காங்கிரஸ் சட்டமன்றக் குழுக் கூட்டத்தை கமல் நாத் கூட்டினார். பதவி விலகல் கடிதம் அனுப்பிய எம்எல்ஏக்கள் தவிர எஞ்சிய 92 எம்எல்ஏக்களும் கூட்டத்தில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 88 பேர் மட்டுமே வந்திருந்தனர். இதனால் மத்திய பிரதேச அரசியலில் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது.
இதற்கிடையே பெரும்பான்மையை நிரூபிக்க விரைவில் கமல்நாத்துக்கு அம்மாநில ஆளுநர் உத்தரவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, குதிரை பேரம் நடைபெறலாம் என கருதப்படுவதால் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் 107 பேரும் டெல்லி அருகே குர்கானில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
காங்கிரசும் தனது எஞ்சிய எம்எல்ஏக்களை ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள சொகுசு விடுதிக்கு அழைத்துச் செல்ல உள்ளது. மேலும் நம்பிக்கை வாக்கெடுப்பில் கமல்நாத் அரசு தோல்வியை தழுவும் நிலையில் மீண்டும் அங்கு பாஜக அரசை அமைக்க சிவராஜ் சிங் சவுகான் முயன்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்தியப்பிரதேசத்தில் 2018 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற நிலையில் ஜோதிராதித்யாவுக்கு முதலமைச்சர் பதவி கிடைக்கும் என அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்தனர். திக்விஜய்சிங், கமல்நாத் இருவரும் சேர்ந்து அதை முறியடித்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஜோதிராதித்யா, 2019 மக்களவைத் தேர்தலிலும் தோல்வியடைந்தார்.
மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைக்கும் என அவர் எதிர்பார்த்திருந்த நிலையில் அதையும் கிடைக்கவிடாமல் செய்யும் வகையில் திக்விஜய் சிங், கமல்நாத் அணியினர் பிரியங்காவை மாநிலங்களவை உறுப்பினராக நிறுத்த வேண்டும் எனக் கருத்துத் தெரிவித்தனர். தனக்கான ஒவ்வொரு வாய்ப்பும் பறிக்கப்பட்டதால், காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணையும் முடிவை ஜோதிராதித்யா எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. தனது ஆதரவு எம்எல்ஏக்கள் 22 பேரையும் பதவி விலகச் செய்து காங்கிரஸ் ஆட்சியை அவர் ஆட்டங்காணச் செய்துள்ளார்.
Comments