வேகமெடுக்கும் கொரானா : கேரளாவில் தீவிர கட்டுப்பாடுகள்
கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் மேலும் 18 பேருக்கு கொரானா உறுதி செய்யப்பட்டதையடுத்து, நாடு முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 62ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் கொரானா பரவாமல் கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் தீவிர கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது.
கேரளாவில் நேற்று மட்டும் 8 பேருக்கு கொரானா வைரஸ் உறுதியாகியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் 5 பேருக்கும், கர்நாடகாவில் 4 பேருக்கும், ஜம்மு-காஷ்மீரில் ஒருவருக்கும் கொரானா உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இவர்களில் புனேவில் கொரானா உறுதி செய்யப்பட்ட 5 பேரில் 4 பேர், அண்மையில் துபாய் சென்று வந்தவர்கள் ஆவர். அதில் 3 பேர், ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்.
புனே தம்பதியுடன் துபாய்க்கு பயணம் சென்ற வந்த 40 பேரை அடையாளம் கண்டு, அவர்களை தனிமையில் கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக 5 குழுக்களை மகாராஷ்டிர அரசு ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் புதிதாக பாதிக்கப்பட்ட 8 பேரையும் சேர்த்து, அந்த மாநிலத்தில் கொரானா வைரசால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது. இதுதவிர்த்து, சந்தேகத்தின்பேரில் 1,495 பேர் தனிவார்டில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
கேரளாவில் கொரானா வைரஸ் பரவாமல் தடுக்க அந்த மாநில அரசு தீவிர கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மருத்துவ கல்வி நிறுவனங்கள் தவிர்த்து பிற கல்வி நிறுவனங்களையும், திரையரங்குகளையும் இம்மாதம் 31ம் தேதி வரை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. 1ம் வகுப்பு முதல் 7ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பொதுமக்கள் அதிக அளவில் பங்கேற்கும் நிகழ்ச்சிகளான திருமணம் மற்றும் பிற கொண்டாட்ட நிகழ்ச்சிகளை 31ம் தேதி வரை ஒத்திவைக்கும்படி அந்த மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கேட்டுக் கொண்டுள்ளார். சபரிமலை கோயில்களுக்கு வருவதை தவிர்க்கும்படி பக்தர்களுக்கு திருவாங்கூர் தேவசம் போர்டு வேண்டுகோள் விடுத்துள்ளது.
கொரானா பரவ காரணமான செயலை மறைப்பது பொது சுகாதார சட்டத்தின்கீழ் (public health act) கிரிமினல் குற்றமென்று கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே. சைலஜா எச்சரித்துள்ளார்..
கொரானா அறிகுறியுடன் வந்த நபர் குறித்து சுகாதாரத் துறைக்கு தகவல் கொடுத்ததால், தம்மை பணியிலிருந்து தனியார் மருத்துவமனை நீக்கி விட்டதாக கேரளாவை சேர்ந்த மருத்துவர் தெரிவித்துள்ளார். மருத்துவர் சீனு சியாமளன் என்ற அவர், கத்தாரிலிருந்து வந்த என்ஆர்ஐ ஒருவருக்கு கொரானா அறிகுறி இருந்தது குறித்து சுகாதாரத்துறைக்கும், போலீஸாருக்கும் தகவல் கொடுத்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக தம்மை மருத்துவமனை நிர்வாகம் பணியிலிருந்து நீக்கி விட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். இந்த குற்றச்சாட்டுக்கு தனியார் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் பதில் அளிக்கப்படவில்லை.
இத்தாலியில் இருந்து கொரானா தொற்றுடன் வந்த கேரள மாநிலம் பத்தனம்திட்டா பெண்ணிடம் இருந்து தொற்று பரவிய அவரது தாய் மற்றும் தந்தையின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. 89 வயதான தாய் ஏற்கனவே நீரிழிவு நோயாளியாவார். 95 வயதான தந்தைக்கு இருதய நோய் உள்ளது. கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்த இருவரின் நிலைமையும் கவலைக்கிடமானதை அடுத்து அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இத்தாலியில் இருந்து வந்த தம்பதியில் ஒருவரான இந்தப் பெண்ணின் மகளுக்கும் மருமகனுக்கும் தொற்று உறுதியான நிலையில் அவர்களது குழந்தையின் ரத்த பரிசோதனை அறிக்கையை மருத்துவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
இத்தாலி நாட்டில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் வந்த பயணிகளுக்கு விமான நிலையத்தில் தனியான இடத்தில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அங்குள்ள மிலன் நகரில் இருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானத்தில் 80 பயணிகள் வந்தனர். அவர்களில் யாருக்கும் இத்தாலியில் மருத்துவப் பரிசோதனை செய்யப்படவில்லை. இதனால் அவர்கள் வந்த விமானம் தனி இடத்தில் நிறுத்தப்பட்டது. பயணிகள் 80 பேரையும் வெட்டவெளியில் நிற்க வைத்துச் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அவர்களிடம் கொரானா மருத்துவப் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.
இத்தாலியில் இருந்து இன்று காலை கேரள மாநிலம் கொச்சி வந்த விமானப்பயணிகள் 10 பேருக்கு கொரானா அறிகுறிகள் இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து களமசேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தனி வார்டில் சேர்க்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
குறிப்பிட்ட விமானத்தில் வந்த 55 பேரில் 35 பேருக்கு விமான நிலையத்தின் அருகில் உள்ள ஆலுவா மாவட்ட மருத்துவமனையில் பரிசோதனை நடத்தப்பட்டது. இவர்களில் 10 பேருக்கு ஜலதோஷம், காய்ச்சல் உள்ளிட்டவை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து களமசேரி மருத்துவக்கல்லூரிக்கு மாற்றப்பட்டனர். இவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வைரஸ் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Comments