பறவையாய் பறக்கிறோம்..! வானில் நெகிழ்ச்சியான பயணம்
நடக்கவே சிரமப்படும் மாற்றுத்திறனாளி சிறுவர்களால் வானில் பறப்பது சாத்தியமா ? சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதை சாத்தியப்படுத்தி அசத்தியுள்ளனர் இந்தச் சிறுவர்கள்...
பறவைகளை பார்க்கும் போதெல்லாம் நாமும் இதுபோல ஒருநாள் வானில் பறக்க வேண்டும் என்ற ஆசை மனதில் தோன்றுவது இயல்பு தான்... பாராசூட் உதவியுடன் இது சிலருக்கு நிறைவேறினாலும், மாற்றுத்திறனாளிகளின் எண்ணற்ற ஆசைகளின் வரிசையின் இடையே இதுவும் நீண்ட நாட்களாக காத்திருக்கிறது....
பாராசூட் போன்ற சாகச விளையாட்டுகள் சென்னை போன்ற சில நகரங்களில் செயல்பாட்டில் உள்ளன, ஆனால் அதில் உள்ள சவால்களின் காரணமாக மாற்றுத்திறனாளிகள் பெரும்பாலும் அனுமதிக்கப்படுவதில்லை, அதிலும் சிறுவர்களுக்கு முற்றிலும் அனுமதி மறுக்கப்படுகின்றது. இந்நிலையில் , வித்யாசாகர் என்ற தொண்டு நிறுவனத்தின் ஆண்டு விழாவையொட்டி பெசன்ட்நகர் கடற்கரையில் மாற்றுத்திறனாளி சிறுவர்களுக்காக ப்ரத்யேக சாகச நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது..
கடற்கரையின் மணலில் காற்றின் திசைக்கு ஏற்ப பறக்கக்கூடிய பாராசூட் களமிறக்கப்பட்டு அதனை கட்டுப்படுத்துவதற்காக ஜீப் ஒன்றின் பின்பகுதியோடு இணைக்கப்பட்டது. பின்னர், பாராசூட்டில் உள்ள பெல்ட்டை இடுப்பு மற்றும் கால்களில் இணைக்கப்பட்டு சிறுவர்கள் அதில் ஏற்றப்பட்டனர். பின்னர், பயிற்சி பெற்ற வல்லுனர்கள் உதவியுடன் பாராசூட் வானில் இயக்கப்பட்டது.
கடற்கரை காற்றின் திசைக்கேற்ப பாராசூட் இயக்கப்பட்டு பாதுகாப்புடன் தரையிறக்கப்பட்டது. இதில் ஒவ்வொரு சிறுவர்களாக மகிழ்ச்சியுடன் வானில் பறந்து அசத்தினர்.பாராசூட் உதவியுடன் முதன்முதலாக வானில் பறந்த சிறுவர்கள் , உற்சாக குரல் எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்
இதுபோன்ற சாகச நிகழ்ச்சிகள் மாற்றுத்திறனாளி சிறுவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாதா ? என்ற கேள்விக்கு பதிலளித்த பிசியோதெரபிஸ்ட், முறையான ஆலோசனைகளை சிறுவர்களுக்கு வழங்கி, உரிய பாதுகாப்பு அம்சங்களுடன் செயல்படுத்தினால் அவர்களாலும் நிச்சயம் சாகசங்களை செய்ய முடியும் என்று நம்பிக்கை ஊட்டினார் .
சவால்களும் சோதனைகளும் நிறைந்த இந்த உலகில் தங்களாலும் பறக்க முடியும், சாதனைகளை எட்டி பிடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையுடன் வானில் பறந்து அசத்திய இந்தச் சிறுவர்கள் , இங்கு வாய்ப்புகள் கிடைத்தால் எதுவும் சாத்தியமே என மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளனர்.
Comments