கொரானா அச்சம் - இத்தாலி முழுதும் சீல் வைப்பு..!
கொரானா தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சியாக நாடு முழுதும் ஒட்டுமொத்தமாக சீல் வைக்கப்படுவதாக இத்தாலி பிரதமர் Giuseppe Conte அறிவித்துள்ளார்.
நாடு முழுதும் ஒட்டுமொத்தமாக சீல் வைக்கப்படுவதை ஒட்டி Sicily மற்றும் Sardinia, தீவுகள் உள்பட இத்தாலியின் ஆறு கோடி மக்களும் பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வரப்படுகின்றனர்.
இதற்காக புதிய கட்டுப்பாட்டுச் சட்டங்கள் உருவாக்கப்பட்டு அவை வரும் 3 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என பிரதமர் அறிவித்துள்ளார். அவசர வேலை அல்லது மருத்துவ தேவைகளுக்காக மட்டுமே மக்கள் நடமாட்டத்திற்கு அனுமதி வழங்கப்படும். பொதுப் போக்குவரத்து செயல்பட்டாலும், மக்கள் வீடுகளில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அரசு கட்டுப்பாட்டை மீறி பயணம் செய்பவர்களுக்கு சிறைத் தண்டனை உள்ளிட்ட அபராதங்கள் விதிக்கப்படும். பொது இடங்களில் கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது. அனைத்து விதமான தனியார், அரசு, விளையாட்டு, மத நிகழ்ச்சிகள் மற்றும் கண்காட்சிகளை நடத்த அனுமதி கிடையாது.
திரையரங்குகள் கேளிக்கை விடுதிகள் அனைத்தும் உடனடியாக மூடப்படுகின்றன. பள்ளிகளும் பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டாலும் மக்களுக்கான கொரானா தடுப்பு நிலையங்கள் திறந்திருக்கும்.
உணவு விடுதிகள், கடைகள் உள்ளிட்டவை திறந்து செயல்பட அனுமதிக்கப்பட்டாலும், வாடிக்கையாளர்கள் ஒரு மீட்டர் இடைவெளியை பின்பற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சுகாதாரப் பணியாளர்களுக்கான விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரானா தாக்குதலைப் பொறுத்தவரை ஐரோப்பிய நாடுகளில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள இத்தாலியில் இதுவரை 463 பேர் பலியாகி உள்ளனர்.
9 ஆயிரத்து 172 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளதால் பலி எண்ணிக்கை பலமடங்கு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
Comments