மத்தியபிரதேசத்தில் பாஜக ஆட்சியமைக்க வாய்ப்பு

0 4275

மத்தியப் பிரதேசத்தில் ஜோதிராதித்ய சிந்தியா ஆதரவு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 22  பேர் மாநில ஆளுநருக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளனர். கர்நாடகத்தில் காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி அரசுக்கு நேர்ந்த அதேநிலை மத்தியப்பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கும் ஏற்பட்டுள்ளது. 

230 உறுப்பினர்களை கொண்ட மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில், பெரும்பான்மை பலத்திற்கு 116 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை. ஆனால், கமல்நாத் அரசுக்கு 120 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தது.

இதில் 114 பேர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள், இருவர் பகுஜன் சமாஜ் கட்சியையும், ஒருவர் சமாஜ்வாதி கட்சியையும் சேர்ந்தவர்கள். இதுதவிர 4 சுயேச்சை எம்எல்ஏக்களும் உள்ளனர். பாஜகவிற்கு 107 எம்எல்ஏக்கள் உள்ளனர்.

2 இடங்கள் காலியாக உள்ளன. இந்நிலையில், ஜோதிராதித்ய சிந்தியா ஆதரவு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 22 பேர் ராஜினாமா கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பியுள்ளனர்.

இதில் 19 பேர் பெங்களூரில் ரிசார்ட்டில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 22 பேரின் ராஜினாமா ஏற்கப்பட்டால், மத்தியப்பிரதேச சட்டப்பேரவையில் காங்கிரசின் பலம் 92 ஆகக் குறைந்துவிடும்.

மத்தியப் பிரதேச சட்டப்பேரவையின் மொத்த பலமும் 208 ஆகக் குறைந்துவிடும் நிலையில், 94 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் சுயேச்சைகள் உள்ளிட்ட 7 பேரின் ஆதரவு இருந்தாலும், கமல்நாத் அரசு கவிழ்ந்துவிடும்.

அதேசமயம், 107 உறுப்பினர்களை வைத்துள்ள பாஜக பெரும்பான்மை பலத்துடன் எளிதாக ஆட்சியமைக்கும். பிறகு இடைத்தேர்தலில் குறைந்த பட்சம் 9 இடங்களில் பாஜக வென்றாலே ஆட்சியை தொடர முடியும்.

இதனிடையே, பெங்களூருவில், தனியார் ரிசார்டில் தங்கியுள்ள மத்திய பிரதேச காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் 19 பேர், தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என, கர்நாடக டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

அதில், தாங்கள் தங்கியிருக்கும் ரிசார்ட்டை சுற்றி, உள்ளும், புறமும் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என, கர்நாடக டிஜிபிக்கு வேண்டுகோள் விடுத்திருக்கின்றனர். பெங்களூருவில் தங்கியிருக்கும், 19 பேரும் ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவாளர்கள் ஆவர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments