ஒரே நாளில் கொரானாவுக்கு 7 பேர் பாதிப்பு

0 9536

இந்தியாவில் கொரானா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 54ஆக உயர்ந்துள்ளது.

இத்தாலியிலிருந்து கடந்த 7ம் தேதி கேரளா திரும்பிய தம்பதி, அவர்களின் குழந்தையான 3 வயது சிறுமிக்கு கொரானா பாதிப்பு பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் சிறுமிக்கு கொரானா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சிறுமி கொச்சியிலுள்ள மருத்துவமனையில் தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறார்.

இதேபோல் துபாயில் இருந்து மகாராஷ்டிர மாநிலம் புனேக்கு திரும்பிய 2 பேருக்கு கொரானா உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து துபாய் வழியாக பெங்களூரு வந்த சாப்ட்வேர் என்ஜீனியருக்கும் கொரானா உறுதியாகியுள்ளது. இதையடுத்து சாப்ட்வேர் என்ஜீனியர், பெங்களூரு மருத்துவமனையில் தனிவார்டில் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இதேபோல் பஞ்சாபில் ஒருவருக்கும், டெல்லி, உத்தரப் பிரதேசத்தில் தலா ஒருவருக்கும் கொரானா வைரஸ் பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.உத்தரப்பிரதேச மாநிலம், காசியிலுள்ள ((வாரணாசி)) சிவன் கோயிலில் சிவலிங்கத்துக்கு அங்கிருக்கும் பூசாரிகள் முககவசத்தை அணிவித்துள்ளனர். சிவலிங்கத்தை பக்தர்கள் யாரும் தொட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்தியாவில் அண்டை நாடுகள் மூலம் தரைமார்க்கமாக கொரானா வைரஸ் பரவாமல் தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மணிப்பூர் மாநிலத்தையொட்டிய மியான்மர் நாட்டினுடனான எல்லைப் பகுதி சீல் வைக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் சிறைகளில் இருக்கும் கைதிகளில் கொரானா வைரஸ் அறிகுறி கொண்டோரை தனிமையில் கண்காணிக்க பிரத்யேக கூடங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரானா பாதித்த 54 பேரில் கேரளாவில் அதிகபட்சமாக 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கடுத்து உத்தரபிரதேசத்தில் 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகத்தில் 5 பேரும், டெல்லியில் 4 பேரும், லடாக்கில் 2 பேரும், தமிழகம், பஞ்சாப், தெலங்கானா மாநிலங்களிலும், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்திலும் தலா ஒருவரும், மகாராஷ்டிரத்தில் 2 பேரும் கொரானா வைரஸ் உறுதியாகியுள்ளது. இதேபோல், ஹரியானாவில் வெளிநாட்டினர் 14 பேருக்கும், ராஜஸ்தானில் வெளிநாட்டினர் 2 பேருக்கும் கொரானா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கேரளாவில் மேலும் 3 பேருக்கும், கர்நாடகத்தில் மேலும் 4 பேருக்கும் கொரானா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கேரளாவில் கொரானா பாதித்தோர் எண்ணிக்கை 12ஆகவும், கர்நாடகத்தில் கொரானா பாதித்தோர் எண்ணிக்கை 5ஆகவும் உயர்ந்துள்ளது. இதேபோல் நாடு முழுமைக்கும் கொரானா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 54ஆக அதிகரித்துள்ளது. 

கொரானா பரவி வருவதை கருத்தில் கொண்டு, கேரளாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 7ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கான தேர்வுகள் 31ம் தேதி வரை சஸ்பெண்ட்  செய்யப்பட்டிருப்பதாக முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இதேபோல் ட்யூசன் வகுப்புகள், அங்கன்வாடிகள், மதரசாக்கள் ஆகியவையும் 31ம் தேதி வரை மூடப்படுவதாகவும், அதேநேரத்தில் 8ம் வகுப்பு, 9ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் எனவும் பினராயி விஜயன் குறிப்பிட்டுள்ளார்

இதனிடையே, ஈரானில் சிக்கியுள்ள இந்திய யாத்ரீகர்களில் முதல்கட்டமாக 58 பேரை இந்திய விமானப்படை மீட்டு அழைத்து வந்துள்ளது. இந்தியாவில் இருந்து ஈரானின் குவோம் நகருக்கு (Qom city) புனித பயணமாக ஏராளமானோர் சென்றுள்ளனர். கொரானா வேகமாக பரவி உயிரிழப்பு நேரிட்டு வருவதால் ஈரானுக்கு இயக்கப்பட்ட விமானங்களை பல்வேறு நிறுவனங்களும் தற்காலிகமாக நிறுத்தியுள்ளன. இதனால் அந்நாட்டில் சிக்கி கொண்ட இந்தியர்களை மீட்டு அழைத்து வர இந்திய விமானப்படையின் சி-17 குளோபல் மாஸ்டர் விமானம் சென்றிருந்தது. அந்த விமானத்தில் முதல் கட்டமாக, டெஹ்ரானில் இருந்து 58 பேர், உத்தரப் பிரதேச மாநிலம் காஜியாபாத்திலுள்ள ஹின்டன் விமானப்படை தளத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவுகளை வெளியிட்டுள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஈரானிலிருக்கும் எஞ்சிய இந்தியர்களும் மீட்கப்பட்டு விரைவில் இந்தியா அழைத்து வரப்படுவர் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

இதனிடையே, கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் ஜப்பானில் இருந்து வந்த தம்பதி 2 பேர் தனிமையில் கண்காணிக்கப்படுகின்றனர். ஜப்பானில் 3 மாதங்கள் பணியாற்றிவிட்டு போச்சம்பள்ளியை சேர்ந்த தம்பதி ஊர் திரும்பியது. ஜப்பானில் கொரானா பாதிப்பு இருப்பதால், ஊர் திரும்பிய இருவரும் கிருஷ்ணகிரி மருத்துவமனை சென்றனர். இருப்பினும் அவர்களுக்கு எந்த அறிகுறியும் பரிசோதனையில் தெரிய வரவில்லை. இருப்பினும் 2 பேரும் மருத்துவர்களின் கண்காணிப்பில் அவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments