ATM- ல் பணம் மட்டுமில்லை.. கொரானாவும் வரலாம்..! எச்சரிக்கும் பூச்சியியல் வல்லுனர்
வங்கி ஏடிஎம்களில் இருந்து பணம் மட்டுமல்ல, கொரோனா போன்ற கொடிய நோய்களை பரப்பும் வைரஸ் கிருமிகளும் வரும் ஆபத்து உள்ளதாக பூச்சியியல் வல்லுனர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
சென்னை தரமணியில் சென்னை பல்கலைகழகத்தின் மைக்ரோ பயாலஜி, பயோ கெமிஸ்ட்ரி,சட்டம் சார்ந்த மருத்துவம் உள்ளிட்ட முதுகலை பட்டப்படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்பு மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
தமிழக அரசின் பொது சுகாதாரத் துறை இயக்குனரகம் சார்பில் நடந்த இந்த கருத்தரங்கில் பூச்சியியல் முதுநிலை வல்லுனர் மணிவர்மா பங்கேற்று கொரோனா வைரஸ் பற்றிய பல்வேறு தகவல்களை மாணவர்களுக்கு விளக்கினார்.
1960-ஆம் ஆண்டிலேயே கொரோனா வைரஸை நாம் சந்தித்திருக்கிறோம் என்றும், இதுவரை 650 வைரஸ் உள்ள நிலையில் 651 வது வைரஸ் கொரோனா என்றும் சுட்டிக்காட்டினார். இந்த வைரஸ் கிருமியானது விலங்குகளிடம் இருந்தோ, பூச்சிகளிடம் இருந்தோ பரவுவதில்லை என்று சுத்தத்தை பேணாத மனிதர்களிடம் இருந்து மனிதனுக்கு பரவும் என்று தெரிவித்தார்.
இந்தியாவில் இன்றும் கேன்களின் மூலம் தான் மருந்து தெளிப்பதாகவும் சீனாவில் பெரிய வாகனங்களில் சென்று மருந்து தெளிக்கும் அளவிற்கு சுத்தம் பேணப்படாமல் இருந்ததாலும் மக்கள் தொகை பெருக்கத்தாலும் அங்கு கொரோனா வேகமாக பரவுவதாக மணிவர்மா தெரிவித்தார். சாதரணமாக ஒருவர் தும்மும் போது 70 கிலோ மீட்டர் வேகத்தில் மூச்சுத்துகள்கள் காற்றில் பயணிக்கும் என்றும், ஒரு மீட்டர் சுற்றளவுக்கு பரவும் என்றும் அவர் தெரிவித்தார்
ஒரு கழிவறையில் இருக்கின்ற வைரஸ் கிருமிகளுக்கு இணையாக ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்காக விரல்களால் பின் நம்பர் பதிகின்ற இடத்தில் வைரஸ் கிருமிகள் தேங்கி இருப்பது ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டதாக தெரிவித்த மணிவர்மா, ஏ.டி.எம்.மில் பணம் மட்டும் அல்ல கொரோனா வைரஸ் கிருமியும் தொற்றிக்கொள்ள வாய்ப்புள்ளதால் முன் எச்சரிக்கையுடன் கையாளுங்கள் கேட்டுக் கொண்டார்
அதே நேரத்தில் நோய் எதிர்ப்பு சக்தி மிக்கவர்களிடம் ஒரு வாரம் கொரோனா வைரஸ் தொற்று இருந்தாலும் அது அவர்களுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்த இயலாமல் தானே செயல் இழந்துவிடும் என்றும் மணிவர்மா தெரிவித்துள்ளார்.
Comments