இந்தியாவை துவம்சம் செய்து கோடிக்கணக்கான உயிர்களை அள்ளிச்சென்ற Spanish flu..
உலகை ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் கால் பதித்துள்ளது. இந்த வைரஸ் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் முதலாம் உலகப்போர் முடியும் சமயத்தில் கோடிக்கணக்கான மனித உயிர்களை கொத்தாக சுருட்டி சென்றது ஒரு கொடூர தொற்று காய்ச்சல்.
இந்த கொடூர வைரஸிற்கு ஸ்பானிஷ் ஃப்ளூ (ஸ்பானிஷ் லேடி) என்று பெயரிடப்பட்டிருந்தது. 1914 ஜூலை துவங்கி 1918 நவம்பர் வரை நடைபெற்றது முதலாம் உலகப்போர். பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகள் ஒரு பக்கமும் ஆஸ்திரியா, ஹங்கேரி, ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் எதிர் பக்கமும் நின்று போரிட்டன. இந்த போரில் ஸ்பெயின் பங்கேற்காமல் நடுநிலையாக இருந்தது.
இந்நிலையில் தான் 1918-ம் ஆண்டின் துவக்கத்தில் உலகம் முழுவதும் திடீரென பரவ துவங்கியது ஒரு வைரஸ் தொற்று. இதற்கு ஸ்பானிஷ் ஃப்ளூ என்று பெயரிடப்பட்டது. இந்த தொற்று நோய் எங்கு, எப்போது, எப்படி பரவ துவங்கியது எனபது குறித்த துல்லிய தகவல் இல்லை. எனினும் முதலாம் உலக போரின் போது தணிக்கை செய்யப்படாத ஸ்பானிஷ் பத்திரிகைகள், போரினால் பாதிக்கப்பட்ட ஐரோப்பா முழுவதும் பரவும் நோயை பற்றிய விவரங்களை வெளியிட்டதால் அதற்கு ஸ்பானிஷ் ஃப்ளூ என்று பெயரிடப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
1918,1919 ஆகிய 2 ஆண்டுகளில் உலகமெங்கும் கோரத்தாண்டவமாடிய இந்த வைரஸ் தொற்று எத்தனை உயிர்களை காவு வாங்கியது தெரியுமா? கிட்டத்தட்ட 5 கோடிக்கும் அதிகமான மக்கள், ஸ்பானிஷ் ஃப்ளூவிற்கு பலியாகியுள்ளனர். இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 20 சதவீதம் பேர் உயிரிழந்துள்ளனர். முதல் மற்றும் இரண்டாம் உலக போர்களின் போது மடிந்தவர்களின் எண்ணிக்கையை விட ஸ்பானிஷ் ஃப்ளூவால் மாண்டவர்கள் எண்ணிக்கை அதிகம் என்கிறது வரலாற்று செய்திகள்.
உலகையே மரண பீதியில் உறைய வைத்த கொடூர ஸ்பானிஷ் ஃப்ளூ, பிரிட்டிஷாரின் ஆளுமையின் கீழ் இருந்த இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. நம் நாட்டில் மட்டும் சுமார் ஒன்றரை கோடிக்கும் அதிகமான மக்கள் இந்த நோய் தாக்கத்திற்கு பலியாகினர். 1918-ம் ஆண்டு ஜுன் மாதம், இந்தியாவின் பம்பாய் நகரில் முதலாக இந்த கொடிய வைரஸ் காலடி எடுத்து வைத்தது.
முதலில் பம்பாயில் 7 போலீஸ் சிப்பாய்கள் வைரஸ் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின் அடுத்த 2 வாரங்களுக்குள் ஸ்பானிஷ் ஃப்ளூ அதிவேகமாக பரவியதில் காய்ச்சல், கைகால்கள் மற்றும் எலும்புகளில் வலி, மூச்சுக்குழாய் வீக்கம், கண் வலி போன்ற அறிகுறிகளால் பம்பாய் முடங்கியது.
பம்பாயில் ஒரு மாதத்தில் சுமார் 1600-க்கும் மேற்பட்டவர்களை காவு கொண்டது இந்த ஸ்பானிஷ் ஃப்ளூ. பின்னர் சற்று அடங்கி இருந்த இந்த தொற்று, 1918 செப்டம்பர் மாதத்தில் மீண்டும் பம்பாயில் அதி தீவிரமாக பரவியது. இதற்கு காரணம் முதலாம் உலகப் போர் வீரர்களுடன் திரும்பிய ஒரு கப்பல் இந்தியாவில் ஸ்பானிஷ் காய்ச்சலை மீண்டும் கட்டவிழ்த்துவிட்டதே என கூறப்படுகிறது. போரில் உயிர் பிழைத்த வீரர்கள் பலரும் தங்களுடன் கொடூர வைரசை எடுத்து வந்துள்ளனர்.
இதனால் பம்பாய் பிரசிடென்சியில் வசித்த ஏராளமானோர் பலியாகினர். பின்னர் நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கில் பரவிய ஸ்பானிஷ் ஃப்ளூவிற்கு 20 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் கூறப்படுகின்றன. பம்பாயிலிருந்து பஞ்சாப் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களுக்கு ஸ்பானிஷ் ஃப்ளூ பரவியது. குறிப்பாக ரயில் பயணங்களின் மூலமாக நாட்டின் பல பகுதிகளுக்கும் ஸ்பானிஷ் காய்ச்சல் பரவியுள்ளது. மகாத்மா காந்தியும் கூட இந்த காய்ச்சல் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்ததாக தெரிகிறது.
அந்த கால இந்தியாவானது பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் பர்மா உள்ளிட்டவை அடங்கிய மிக பெரிய நாடாக இருந்தது. 1918-ல் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்த கொடூர வைரஸின் உக்கிரம் அதிகமாக இருந்துள்ளது. 1919-ம் ஆண்டின் முற்பகுதிக்குள் ஸ்பானிஷ் ஃப்ளூவிற்கு இந்தியாவில் பலியானவர்களின் எண்ணிக்கை ஒன்றரை கோடிக்கும் அதிகம். அதே போல ஸ்பானிஷ் ஃப்ளூவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் பெண்கள் அதிகம் பலியான ஒரே நாடும் இந்தியா தான் என்று கூறப்படுகிறது.
Comments